சிருங்கேரி மறுஓட்டு எண்ணிக்கை வழக்கு தற்போதைய நிலை தொடர கோர்ட் உத்தரவு
சிருங்கேரி மறுஓட்டு எண்ணிக்கை வழக்கு தற்போதைய நிலை தொடர கோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 23, 2026 11:12 PM

பெங்களூரு: சிருங்கேரி சட்டசபை தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை வழக்கில், 'தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கூறி, விசாரணையை ஜூலை 30க்கு ஒத்தி வைத்தது.
சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி சட்டசபை தொகுதியில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசின் ராஜே கவுடா, 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஓட்டு எண்ணிக்கையின் போது, 1,822 தபால் ஓட்டுகளில், 279 ஓட்டுகள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
தபால் ஓட்டுகளில் சந்தேகம் எழுப்பிய பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஜீவராஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், மே 2ம் தேதி, தபால் ஓட்டுகளை மறு எண்ணிக்கை நடத்தும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து, சிக்கமகளூரு நகரின் ஐ.டி.எஸ்.ஜி., கல்லுாரியில் மறுஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், பா.ஜ.,வின் ஜீவராஜ் 52 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை யடுத்து, மே 6ல் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்று கொண்டார். இந்த மறு ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து, காங்கிரசின் ராஜேகவுடா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ஜீவராஜ் வெற்றி பெற்றதற்கு தற்காலிக தடை விதித்து, ஜூலை 23க்கு ஒத்தி வைத்தது.
இம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். விசாரணை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது.
