UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 07:46 PM
குடகு: கஞ்சா போதையில் போலீசாரிடம் சிக்கியவருக்கு, நீதிமன்றம் நுாதன தண்டனை விதித்தது.
குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவில் வசிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் பொது இடங்களில் நடமாடி, மக்களுக்கு தொல்லை கொடுத்தார். அவ்வப்போது போலீசாரிடம் சிக்கினார். பல முறை போலீசார் எச்சரித்தும், அதே தவறை மீண்டும், மீண்டும் செய்தார்.
கடந்த வாரம் கஞ்சாவை புகைத்து விட்டு, போலீசாரிடம் சிக்கினார். இவரை போலீசார் கைது செய்தனர். விராஜ்பேட் முதன்மை சிவில் மற்றும் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையில் இவரது குற்றம் உறுதியானது. எனவே அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன், ‘போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஒருநாள் ஈடுபட வேண்டும்’ எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘சிறு, சிறு வழக்குகளில் வெறும் அபராதம் விதித்து அனுப்பினால், குற்றவாளிகள் திருந்தாமல் மீண்டும் அதே தவறை செய்கின்றனர். அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் படும் கஷ்டங்கள், சூழ்நிலை புரிய வேண்டும். எனவே ஒரு நாள், போக்குவரத்து நிர்வாகப் பணியில் ஈடுபட வேண்டும்’ என நீதிபதி அறிவுறுத்தினார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, போலீசார் அந்நபரை விராஜ்பேட்டின் சித்தாபுரா சந்திப்புக்கு, நேற்று காலை அழைத்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தினர்.
நீதிமன்றம் விதித்த நுாதன தண்டனையை, பொது மக்கள் பாராட்டுகின்றனர். ‘இந்நபருக்கு ஒரு நாள் தண்டனை போதாது; குறைந்தபட்சம் ஒரு வாரமாவது போக்குவரத்து நிர்வாகப் பணியில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும்’ என, கருத்து தெரிவித்துள்ளனர்.
