UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 07:46 PM

– நமது நிருபர் –
பெங்களூரு சித்தேஹள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ சவுந்தர்ய வெட்கடரமணா சுவாமி கோவில், வெங்கடேஸ்வர பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.
இது, சவுந்தர்ய கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. உடுப்பி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகளின் அருளாசியுடன், கடந்த ஆண்டு மே மாதம் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா விமரிசையாக நடந்தது.
தாசரஹள்ளி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பக்தர்களுக்கு முக்கிய ஆன்மிக தலமாக விளங்குகிறது. இந்த கோவில் மங்களூரில் உள்ள கோவில்களை போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. கோவிலின் மேற்பகுதி ஓடுகளாலும், ஆங்காங்கே துாண்களும் உள்ளன.
கோவிலுக்குள் நுழைந்ததும் மிகப்பெரிய கொடிக்கம்பம் வரவேற்கிறது. இங்குள்ள அமைதியான சூழல், ஆன்மிக சிந்தனைகளை அதிகப்படுத்தும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, லட்டு பிரசாதம் வழங்கப் படும். துளசி, பழம், தேங்காய் கொண்டு சென்று, பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.
இக்கோவிலின் மூலவர் வெங்கடேஸ்வர பெருமாள், திருப்பதி ஏழுமலையான் போல காட்சி அளிக்கிறார். காலை 6:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல், இரவு 8:30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், இசை கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் நடக்க கோரியும், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
இந்த பூஜையில் பங்கேற்றவர்களுக்கு விரைவில் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
