பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசிப்பவர் சிரஞ்சீவி, 32. நேற்று முன்தினம் இரவு பைக்கில் வெளியே சென்றார். எதிரே வந்த பைக், சிரஞ்சீவி பைக் மீது மோதுவது போல வந்தது. ஒழுங்காக பைக் ஓட்டும்படி, பைக்கில் வந்த இருவரிடம், சிரஞ்சீவி கூறினார். கோபம் அடைந்த இருவரும் தங்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால், சிரஞ்சீவியை தாக்கிவிட்டு தப்பினர். அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெங்களூரு பனசங்கரி 9வது மெயின் ரோட்டில் வசிப்பவர் ரமேஷ், 58. இவரும், நண்பர்கள் 3 பேரும் கடந்த மாதம் 27ம் தேதி வீட்டில் அமர்ந்து சீட்டு விளையாடினர். வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த, ஆறு பேர், ரமேஷ், அவரது நண்பர்களை தாக்கினர். வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்துவிட்டுத் தப்பினர். ரமேஷ் அளித்த புகாரில், ரவுடி பிரவீன், அவரது கூட்டாளிகள் மனோகர், ஸ்ரீகாந்த், சதீஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் டவுனில் அய்யப்பன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, மர்மநபர் ஒருவர், கதவை உடைத்து உள்ளே புகுந்தார். உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிவிட்டுத் தப்பினார். சமீபத்தில் தான் உண்டியல் பணம் எண்ணப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கில் தான் பணம் திருடப்பட்டு இருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

