3 மாணவர் மீது வழக்கு
பெங்களூரு மாதநாயக்கனஹள்ளி பகுதியில் உள்ள பொறியியல் கல்லுாரியில் படித்து வந்த மாணவர் அருண், சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருணின் தந்தை மாதநாயக்கனஹள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரில், தன் மகன் இறப்பில் சக மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, சிரந்த், விகாஸ் கவுடா, அமீன் ஆகிய மூன்று மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிறுவன் கொலை
பாகல்கோட் மாவட்டம், இளகல் தாலுகாவில் உள்ள பெனகாவாடி கிராமத்தை சேர்ந்த மாருதி என்பவரின் மூன்று வயது ஆண் குழந்தை மதுகுமார். அங்கன்வாடியில் இருந்த குழந்தையை, அவரது மாமா பீமப்பா நேற்று வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது, மாருதியின் மீது இருந்த கோபத்தால், மதுகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். போலீசார், பீமப்பாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பஸ் மோதி பலி
பெங்களூரு சில்க் இன்ஸ்டிடியூட் மெட்ரோ நிலையம் அருகே நேற்று காலை பி.எம்.டி.சி., பஸ், பைக் மீது மோதியது. பைக்கில் பின்புறம் அமர்ந்து வந்த கனகபுரா தாலுகா டாடகுனியை சேர்ந்த வலியம்மா,60, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த ராஜா, 36, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ் ஓட்டுநர், நடத்துநர் தப்பி சென்றனர். தலக்கட்டபுரா போக்குவரத்து போலீஸ் விசாரிக்கின்றனர்.
4 பெண்கள் கைது
பானஸ்வாடியில் கடந்த ஜூன் 30ல் நடந்த ஜெகந்நாத சுவாமி ரத உத்சவத்தில், நகை திருட்டு குறித்து பானஸ்வாடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த ஆஷா, 30, யசோதா, 55, காயத்ரி, 34, பிரியா, 33 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 140 கிராம் தங்க நகைகளை மீட்டனர். இவர்கள் கோவில் திருவிழாக்களின் போது, பக்தர்கள் போல நடித்து, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
கொள்ளையன் கைது
தமிழகத்தை சேர்ந்தவர் தனபால், 48. இவர் பெங்களூரில் உள்ள பூட்டப்பட்ட வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரை நேற்று ஹுலிமாவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 15.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை மீட்டனர். திருடிய நகைகளை மரத்தின் அடியில் புதைத்து வைத்திருந்ததும் தெரிய வந் துள்ளது.