ADDED : ஜூலை 11, 2026 11:28 PM
மாணவி தற்கொலை; 4 பேர் மீது வழக்கு
பெங்களூரு புறநகர், ஆனேக்கல்லின், மரசூரு மடிவாளா அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மதுஸ்ரீ, 14, இம்மாதம் 9ம் தேதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன், இவர் எழுதி வைத்த கடிதத்தில், பள்ளியில் நடந்த அவமரியாதையை விவரித்திருந்தார். இதன்படி, தலைமை ஆசிரியை சுஜாதா, ஆசிரியைகள் ரூபா, கவிதா, சமையல் ஊழியர் கமலம்மா மீது, சூர்யநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அடமான மோசடி
ஷிவமொக்காவின், தீர்த்தஹள்ளியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், ராகுல், லோகேஷ், சுதா, ரவிசங்கர், சரத் ஆகியோர் போலியான நகைகளை அடமானம் வைத்து, 28.87 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அடமானத்தை புதுப்பிக்க இவர்கள் வராததால், சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் நகையை சோதித்த போது, அவை போலியானவை என்பது தெரிந்தது. அதிகாரிகள் கொடுத்த புகாரில், ஐவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பஸ்சில் பாலியல் தொல்லை
தட்சிண கன்னடா, மங்களூரில் இரண்டு நாட்களுக்கு முன், தனியார் பஸ்சில் பயணித்த இர்பான், 32, என்பவர், கல்லுாரி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதே போல, பல மாணவியருக்கு தொல்லை கொடுத்த இவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
ரவுடி கைது
பெங்களூரின், அசோக்நகரில் ரவுடித்தனம் செய்து, மக்களை அச்சுறுத்தியவர் தீக்ஷித் ஷெட்டி என்ற தீக்ஷித், 35. இவர் மீது அசோக்நகர் போலீஸ் நிலையத்தில், ஐந்து வழக்குகள் பதிவாகின. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஐந்து ஆண்டாக ஆட்டம் காட்டினார். குற்றங்களிலும் ஈடுபட்டார். இவரை சி.சி.பி., போலீசார் நேற்று கைது செய்தனர்.
