ADDED : ஜூலை 28, 2026 02:00 AM

ரவுடிகள் வெட்டி கொலை
பெங்களூரின் ஹுலிமாவு போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருப்பவர் வெங்கடேஷ், 45. இவர் ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவின் உய்யம்பள்ளியின் சீலந்தவாடி சாரையின் சித்தப்பாஜி கோவில் அருகில் உள்ள தன் பண்ணை வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை, இவரது வீட்டில் புகுந்த மர்ம கும்பல், அவரை கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
து மகூரு நகரின், பெளகும்பா கிராமத்தில் வசித்தவர் ரவுடி மல்லா என்ற வீரண்ணா, 38. இவர், நேற்று முன் தினம் இரவில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்மகும்பல், அவரை கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
உடலை புதைத்த 3 பேர் கைது
சிக்கமகளூரு மாவட்டம், கடூர் தாலுகாவின் தொன்னேகொரணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கரியப்பா, 52. நான்கு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. போலீஸ் விசாரணையில், சந்திரப்பா என்பவரின் விவசாய நிலத்தில், காட்டுப் பன்றிகள் வராமல் இருப்பதற்காக மின்சார வேலி அமைத்திருந்தார்.
இதை அறியாமல் அங்கு சென்ற கரியப்பா மின்சாரம் தாக்கி இறந்தார். தன் நண்பர்கள் கெஞ்சப்பா, யதுகுமார் ஆகியோரின் உதவியுடன், கரியப்பாவின் உடலை சந்திரப்பா அதே இடத்தில் புதைத்தார். மூவரும் கைது செய்யப்பட்டனர்.
20 சொகுசு கார்கள் எரிந்து சாம்பல்
பெங்களூரின் தனிச்சந்திரா பிரதான சாலையில் பாரதிய சிட்டி அருகில் தனியார் கார் கேரேஜ் உள்ளது. இங்கு சிறு சிறு பழுதுகளை சரி செய்வதற்காக, கொண்டு வரப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று அதிகாலையில் கேரேஜில் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி, பக்கத்தில் இருந்த ஷெட், ஜன்னல் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் தீ பரவியது. இதில், கேரேஜில் இருந்த ஜாக்குவார், ரேஞ்ச் ரோவர் உட்பட விலை உயர்ந்த 20க்கும் மேற்பட்ட கார்கள், ஷெட்டில் இருந்த எட்டு ஆட்டோக்கள் கருகின.
தொழிற்சாலையில் இருந்த, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜன்னல்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைந்தன.
கணவர் வீட்டில் திருடிய மனைவி
ஹாசன் நகரின் தொட்ட ஹொன்னேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கேசவகவுடா. இவரது வீட்டில், 56.16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 441.5 கிராம் தங்கநகைகள், 13.40 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றனர். போலீசார் பல கோணங்களில் விசாரித்தனர். கேசவகவுடாவின் மருமகள் அம்ருதா, கள்ளக்காதலன் பரமேசுடன் சேர்ந்து, தன் வீட்டிலேயே கொள்ளை அடித்ததை கண்டுபிடித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
