/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாமனார் பாணியில் மருமகள் 'ஏழைகளின் டாக்டர்' ராஜேஸ்வரி
/
மாமனார் பாணியில் மருமகள் 'ஏழைகளின் டாக்டர்' ராஜேஸ்வரி
மாமனார் பாணியில் மருமகள் 'ஏழைகளின் டாக்டர்' ராஜேஸ்வரி
மாமனார் பாணியில் மருமகள் 'ஏழைகளின் டாக்டர்' ராஜேஸ்வரி
ADDED : செப் 07, 2025 10:51 PM

நோயாளிகளுக்கு டாக்டர் எப்போதுமே உயிரை காப்பாற்றும் கடவுளாக தான் கண்களுக்கு தெரிவார். குடும்பத்தினரிடம் கூட கூற தயங்கும் நோய்களை, டாக்டர்களிடம் நோயாளிகள் மனது விட்டு கூறி விடுவர்.
வெளிநாடுகளில் படித்து விட்டு கிராமப்புறங்களில் மக்களுக்காக சேவை செய்வோர்; குறைந்த கட்டணத்தில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும் உள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜேஸ்வரி.
மாண்டியாவின் கே.ஆர்.பேட் டவுனில் 'சஞ்சீவினி' என்ற பெயரில் தனியார் மருத்துவமனை நடத்துகிறார். தன்னிடம் வரும் நோயாளிகளிடம், சிகிச்சை கட்டணமாக 50 ரூபாய் மட்டும் வாங்குகிறார். விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யாமல், நோயின் அறிகுறியை பார்த்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் எழுதி கொடுக்கிறார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி கூறியதாவது:
எனது மாமனார் மதுவினகோடி கணேஷ் கவுடா. டாக்டரான அவர், ஏழை, எளிய மக்களிடம் இருந்து பணம் வாங்காமல் வீடு, வீடாக சென்று சிகிச்சை அளித்தவர். மாமனார் பாணியில் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
நோயாளிகளிடம் சிகிச்சை கட்டணமாக 50 ரூபாய் தான் வசூலிக்கிறேன். இதுவும் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க தான். மருத்துவத்தை பணத்திற்காக பயன்படுத்த கூடாது என்பது எனது குறிக்கோள். எம்.பி.பி.எஸ்., படித்து இருந்தாலும், நகர பகுதியில் சென்று மருத்துவம் பார்க்க எனது மனம் ஒப்பு கொள்ளவில்லை. கிராம மக்களுக்கு சேவை செய்யவே ஆசைப்பட்டேன். அது நிறைவேறி விட்டது.
எனது கடைசி காலம் வரை குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பேன். டாக்டர்களை, நோயாளிகள் கடவுளாக பார்க்கின்றனர். நோயாளிகள் வைத்து உள்ள நம்பிக்கையை டாக்டர்கள் அனைவரும் காப்பாற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -