UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 10:59 PM
மங்களூரு: தன்னை விட அதிக வயதான, ஏற்கனவே திருமணமானவரை காதலித்து, ஓடிப்போன மகளை மீட்டு தரும்படி போலீசாரிடம் பெற்றோர் மன்றாடினர். ஆனால், மகளோ பெற்றோரை உதறி தள்ளினார்.
உத்தர கன்னடா மாவட்டம், குமட்டா தாலுகாவின், பெடகுளி கிராமத்தில் வசிக்கும் தாவூத் காசிம் என்பவருக்கு, 22 வயதில் மகள் உள்ளார்.
இவர் தன் மகளை, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் உள்ள மதரசாவில், மதம் தொடர்பான கல்விக்காக சேர்த்திருந்தார். இங்கு அஸ்ரத், 40, என்பவர் கல்வி போதித்து வந்தார்.
இவர் ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தும் அதை மறைத்து தன்னிடம் கல்வி கற்க வந்த இளம் பெண்ணை, காதலிப்பதாக கூறி, தன் வலையில் விழ வைத்தார். இருவரும் ஓடிப்போய் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் அப்பெண்ணை, மங்களூரின் அசைகோளியில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
மகளை காணாமல் பீதியடைந்த பெற்றோர், மகளை தேடி, மங்களூருக்கு வந்தனர். கோனாஜி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும் அஸ்ரப்பையும், இளம்பெண்ணையும் நேற்று காலை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, பெற்றோருடன் செல்லும்படி அறிவுறுத்தினர். பெற்றோரும், சகோதரரும் கண்ணீர் விட்டு கதறி, தங்களுடன் வரும்படி அழைத்தனர்.
ஆனால் மனம் கரையாத மகள், பெற்றோருடன் செல்ல மறுத்து, தான் திருமணம் செய்த அஸ்ரப்புடன் வாழ்வதாக பிடிவாதம் பிடித்தார். தன் சுயவிருப்பத்துடன் செல்வதாக கூறி, பெற்றோரை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
