தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தல் 2 அமைச்சர்கள் மோதலால் மேலிடத்துக்கு நெருக்கடி

தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தல் 2 அமைச்சர்கள் மோதலால் மேலிடத்துக்கு நெருக்கடி

தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தல் 2 அமைச்சர்கள் மோதலால் மேலிடத்துக்கு நெருக்கடி


ADDED : மார் 11, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், சீட் விஷயத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், தோட்டக்கலைத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் இடையே மோதல் முற்றுகிறது. பகிரங்கமாகவே விமர்சித்து கொள்கின்றனர்.

தாவணகெரே தெற்கு தொகுதியின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சாமனுார் சிவசங்கரப்பா, 94. இவர் சில மாதங்களுக்கு முன், காலமானார். இவரால் காலியான தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

சிவசங்கரப்பாவின் மகன் மல்லிகார்ஜுன் மாநில தோட்டக்கலை துறை அமைச்சராக உள்ளார். இவர், இத்தொகுதியில் தன் குடும்பத்தினருக்கே சீட் கொடுக்க வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கிறார். ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே, சிவசங்கரப்பாவின் குடும்பத்தில், அவரது மகன் மல்லிகார்ஜுன் அமைச்சராக இருக்கிறார். இவரது மனைவி பிரபா, தாவணகெரே எம்.பி.,யாக இருக்கிறார். இந்நிலையில் இடைத்தேர்தலில், இவர்களின் குடும்பத்தினருக்கே சீட் கொடுப்பதுசரியல்ல.

சீட் கொடுத்தால் குடும்ப கட்சி என, காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்படும். எனவே அவரது குடும்பத்தை சாராத புதியவருக்கு சீட் தரும்படி, பலரும் வலியுறுத்துகின்றனர்.

தாவணகெரே தெற்கு தொகுதியில், முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவில் உள்ளனர். எனவே இம்முறை தங்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என, முஸ்லிம் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

இது குறித்து, அமைச்சரான ஜமீர் அகமது கானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமைச்சரும் இதை ஆமோதிக்கிறார். அவ்வப்போது தாவணகெரேவுக்கு செல்கிறார். தலைவர்களை சந்திக்கிறார். முஸ்லிம் தலைவருக்கு சீட் தரும்படி, முதல்வரிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனால், சாமனுார் சிவசங்கரப்பா குடும்பத்தினர், எரிச்சல் அடைந்துள்ளனர். எங்கள் மாவட்ட விஷயத்தில், ஜமீர் அகமது கான் தலையிட தேவையில்லை என, காட்டமாக கூறியுள்ளனர். இரண்டு அமைச்சர்கள் இடையிலான மோதல் முற்றுவதால், முதல்வர் சித்தராமையாவுக்கும், மேலிடத்துக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, அமைச்சர் மல்லிகார்ஜுன் அளித்த பேட்டி:

தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என, கட்சி மேலிடம் முடிவு செய்யும். எங்கள் மாவட்டத்தில் வந்து பேசுவதற்கு, ஜமீர் அகமதுகான் யார். எங்கள் மாவட்ட விஷயத்தில், அவர் தலையிட தேவையில்லை.

சீட் தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடக்கும் போது, நாங்களும் செல்வோம். கருத்துகளை தெரிவிப்போம். தகுதியான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பது, எங்களின் விருப்பம்.

நான் தொண்டர்களின் முடிவுக்கே விட்டு விட்டேன். நான் தலையிட மாட்டேன். அனைத்து சமுதாயத்தினரும், ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை முடிவு செய்து களமிறக்குவோம்.

தாவணகெரே மாவட்டத்தில் இருப்பது, எங்கள் தொகுதிகள். இங்கு வந்து பேச அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார். கட்சி மேலிடத்திடம் என் மகனுக்கு சீட் கேட்கவில்லை. எங்கள் குடும்பத்துக்கே சீட் வேண்டும் என, வலியுறுத்தவும் இல்லை. மேலிடத்தின் முடிவே இறுதியானது.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us