ADDED : அக் 11, 2025 04:57 AM

உணவுகளுக்கு பிரபலமான நகரங்களில் ஒன்று, தமிழகத்தில் உள்ள மதுரை. இங்குள்ள உணவுகளை ருசிக்க வெளிநாடுகளிலிருந்தும் பலரும் வருகை தருகின்றனர். அப்படிப்பட்ட மதுரையில் உள்ள பிரபலமான உணவு வகைகளின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வருவது மதுரை பட்டர் பன். இந்த மதுரை பட்டர் பன் சாப்பிட மதுரைக்கு போக வேண்டும் என்ற அவசியமில்லை. இதை வீட்டிலே அதே ஸ்டைலில் செய்து சாப்பிடலாம் .
எப்படி செய்வது? மதுரை பட்டர் பன் செய்வதற்கு மிக முக்கியமானது, சரியான - தரமான பன்னை தேர்வு செய்வது. பன் டீக்கடையில் விற்பது போன்ற வட்ட வடிவில் இருப்பது அவசியம். முதலில் பன்களை குறுக்கே நடுப்பகுதியில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய பன்னின் உள்புறம் ஸ்பூன் மூலம்வெண் ணெய்யை தடவ வேண்டும். தடவிய வெண்ணெய் மீது சிறிதளவு சர்க்கரை துாவ வேண்டும்.
பின், தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் போட்டு, அதன் மீது பன்னை வைக்க வேண்டும்.பன்னின், மேல்புறம் வெண்ணெய் தடவ வேண்டும்.
இதன் மீது சர்க்கரை போட வேண்டும். பிறகு, காய்த்து வைத்த பாலை ஊற்ற வேண்டும்.
ஊற்றிய பாலை பன் முழுதும் உறிஞ்சி எடுத்த பிறகு, பன்னை தோசைக்கல்லில் இருந்து எடுக்க வேண்டும். இதுபோல அனைத்து பன்களையும் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் நாவில் பட்டவுடன் கரையும் தன்மையுடைய மதுரை பட்டர் பன் தயார்.
இதை மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். வீட்டில் உள்ள குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர். மீண்டும் செய்ய கூறி அடம்பிடிப்பர்
- நமது நிருபர் -.