
வீட்டுக்கு திடீரென விருந்தாளி வந்து விட்டால், அவர்களை உபசரிக்க என்ன செய்யலாம் என்று, ஆலோசிக்கிறீர்களா. கவலையே வேண்டாம். சட்டென ரவை பர்பி செய்து கொடுத்து அசத்துங்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்:
தேவையான பொருட்கள்
பாம்பே ரவை - 1 கப்
பால் - 1 கப்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
நெய் - 2 கப்
முந்திரிப்பருப்பு - ஒரு கைப்படி
ஏலக்காய் துாள் - கால் ஸ்பூன்
சர்க்கரை - கால் கப்
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில், அரை கப் நெய் ஊற்றவும். சூடானதும் பால், ஒரு கப் தண்ணீர், கேசரி பொடியை போட்டு மிதமான தீயில் வைக்கவும். பால் கொதித்த பின் இறக்கவும். முந்திரிப்பருப்பை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அரை கப் நெய் ஊற்றவும். கரைந்ததும் ரவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து, ரவையை வறுக்கவும். பொன்னிறமாக மாறும் வரை, வறுக்க வேண்டும். நறுமணம் வரும் வரை கை விடாமல் கிளற வேண்டும்.
அதன்பின், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள, பால், நெய் கலவையை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். ரவை, பாலுடன் கலந்து திரண்டு வரும் போது மிச்சமுள்ள நெய் ஊற்றவும். இதில், சர்க்கரை, ஏலக்காய் துாள், பொடித்த முந்திரிப்பருப்பை போட்டு கிளறவும்.
அகலமான தட்டில் நெய் தடவி, அதில் இந்த கலவையை கொட்டி சமன்படுத்தவும். ஆறிய பின் விருப்பமான வடிவத்தில் வெட்டினால், சுவையான ரவை பர்பி ரெடி. அதை தயாரிக்க அதிக நேரம் தேவையில்லை. அதிகபட்சம் 20 நிமிடங்கள் போதும்.
- நமது நிருபர் -

