இடிக்கப்பட உள்ள வீடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
இடிக்கப்பட உள்ள வீடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 08:44 PM

பெங்களூரு: ‘‘குஞ்சூரு, வர்த்துார் சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட உள்ள, 40க்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’’ என பா.ஜ., – எம்.எல்.ஏ., மஞ்சுளா லிம்பாவளி கூறி உள்ளார்.
பெங்களூரில், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மிக முக்கியமான சாலையாக குஞ்சூர், வர்த்துார் சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் லேசான மழை பெய்தாலே, குளம் போல தண்ணீர் தேங்கி விடும். இச்சாலையில், பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, கடந்த வாரம் ஆய்வு செய்தார்.
சாலையை உடனடியாக விரிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, சாலை விரிவாக்க பணிகள் நடக்கின்றன. இப்பணிகளால், 40க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படும் என கூறப்படுகிறது.
இது குறித்து, மஹாதேவபுரா தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., மஞ்சுளா லிம்பாவளி நேற்று கூறியதாவது:
குஞ்சூர், வர்த்துார் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிறது. வர்த்துாரில் மட்டும் 38 பள்ளிகள் உள்ளன.
பள்ளி மாணவர்கள் உட்பட ஐ.டி., ஊழியர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் பயணிக்கின்றனர். இப்பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இதனால், இச்சாலை 30 மீட்டர் சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சரியாக நடத்த வேண்டும். இடிக்கப்பட உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு முறையான இழப்பீடு, சட்டப்படி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
