ADDED : ஜூலை 27, 2025 05:08 AM
ஹாசன்: துணை முதல்வர் சிவகுமார், கோடி மடத்துக்கு சென்று, மடாதிபதியை சந்தித்து ஆசி பெற்று, ஜோதிடம் கேட்டறிந்தார்.
ஹாசனின், அரசிகெரேவில் நடந்த பயனாளிகள் மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் சிவகுமார், ஹாசன் சென்றிருந்தார்.
மாநாடு முடிந்த பின், பிரசித்தி பெற்ற ஜேனுகல் சித்தேஸ்வரா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பின் அரசிகெரேவின், ஹாரனஹள்ளியில் உள்ள, கோடி மடத்துக்கு சென்றார்.
மடாதிபதி சிவயோகி சிவானந்த ராஜேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றார். அவரிடம் தன் எதிர்காலம் குறித்து, ஜோதிடம் கேட்டறிந்தார். அரைமணி நேரத்துக்கும் மேலாக, இருவரும் ஆலோசனை நடத்தினர். சிவகுமாருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம்.
பின் செய்தியாளர்களிடம் சிவகுமார் கூறுகையில், “ஜேனுகல் சித்தேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தேன். அவரை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மாநிலத்துக்கு நல்லது நடக்க வேண்டும். மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென, பிரார்த்தனை செய்தேன்,” என்றார்.