/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்
/
நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்
நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்
நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்
ADDED : மே 16, 2025 10:15 PM

விஜயநகரா: “நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும். இதுபற்றி விரைவில் முடிவு செய்யப்படும்,” என, துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
பல்லாரி ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகேந்திரா. பழங்குடியினர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டால், கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின், அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
மூன்று மாத சிறை வாசத்துக்கு பின், ஜாமினில் வெளியே வந்தார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என, முதல்வர் சித்தராமையா கூறினார். ஆனால் சிறையில் இருந்து வந்து ஏழு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
இதற்கிடையில், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று பல்லாரி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான கம்பளி கணேஷ், சிருகுப்பா நாகராஜ் துண்டு போட்டனர்.
அதிருப்தி அடைந்த நாகேந்திரா கட்சி நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ளாமல் விலகியே உள்ளார். நாகேந்திரா முன்பு பா.ஜ.,வில் இருந்தவர் என்பதால், அக்கட்சிக்கு மீண்டும் அவரை இழுக்க முயற்சி நடப்பதாகவும் பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் விஜயநகரா ஹொஸ்பேட்டில் துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
அமைச்சர் பதவி வகிக்கும் அனைத்து தகுதியும் நாகேந்திராவிடம் உள்ளது. அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படும். இதுபற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும்.
கர்நாடக காங்கிரசில் எந்த பிரிவும் இல்லை. ஐந்து வாக்குறுதித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி உள்ளோம். மக்களிடம் புதிய ஆற்றலை புகுத்துவது அரசின் யோசனை. இந்த விஷயத்தில் நாங்கள் சாதித்துள்ளோம்.
அரசின் இரண்டாம் ஆண்டு சாதனையை கொண்டாடும் வகையில், வருவாய் துறை மூலம் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு உரிமை சான்றிதழ் வழங்க உள்ளோம்.
நவில் நீர்த்தேக்க திட்டம் தொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி உள்ளேன். அந்த மாநில தொழில்நுட்ப குழு இங்கு ஆய்வு செய்து உள்ளது.
துங்கபத்ரா அணையின் மதகு கடந்த ஆண்டு அடித்துச் செல்லப்பட்டது. அணையில் உள்ள அனைத்து மதகு கேட்களையும் மாற்றுவோம். கலசா - பண்டூரி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி நான்கு மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.