/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வுடன் ம.ஜ.த., இணையும் துணை முதல்வர் சிவகுமார் ஆரூடம்
/
பா.ஜ.,வுடன் ம.ஜ.த., இணையும் துணை முதல்வர் சிவகுமார் ஆரூடம்
பா.ஜ.,வுடன் ம.ஜ.த., இணையும் துணை முதல்வர் சிவகுமார் ஆரூடம்
பா.ஜ.,வுடன் ம.ஜ.த., இணையும் துணை முதல்வர் சிவகுமார் ஆரூடம்
ADDED : ஜன 09, 2026 06:33 AM

பெங்களூரு: ''மத்திய அமைச்சர் குமாரசாமி விரைவில் ம.ஜ.த.,வை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவார்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு சிவாஜி நகர் குயின்ஸ் சாலையில், நேற்று சாமராஜ்பேட் தொகுதி ம.ஜ.த., தலைவர் கோவிந்தராஜு, அவரது மனைவி கவுரம்மா, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டோர், துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் முன்னிலையில், கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் கொடியை சிவகுமார் வழங்கினார்.
பின், அவர் கூறியதாவது:
மேல்சபை ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.சி., கோவிந்தராஜு, ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணியை ஏற்க முடியாமல், மதசார்பற்ற சித்தாந்தம் கொண்ட எங்களின் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார். குமாரசாமியை விட எனக்கு அரசியலில் அதிக அனுபவம் உள்ளது. நான் முதல்வராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நிர்வாகத்தில் அவரை விட எனக்கு அதிக அனுபவம் உண்டு. நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவரின் செயல்பாடுகளை பார்க்கும் போது, விரைவில், ம.ஜ.த.,வை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவார் என்றே தோன்றுகிறது. பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நெருங்கி வருகிறது. இத்தேர்தலில், காங்கிரசில் இருந்து போட்டியிட பெங்களூரு மேற்கில் 247, பெங்களூரு வடக்கில் 199, பெங்களூரு தெற்கில் 129, பெங்களூரு மத்தியில் 106, பெங்களூரு கிழக்கில், 78 என மொத்தம், 779 பேர் ஆர்வமாக உள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வரும், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வார்டில் யார் பணியாற்றினர், யார் பணியாற்றவில்லை என்பதை சரிபார்த்து சீட் வழங்கப்படும்.
பெங்களூரு நகரில் காங்., அரசு செய்து வரும் பணிகளை பா.ஜ., தலைவர்கள் வரவேற்றுள்ளனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கணக்குகளை மாற்றுவதையும், சொத்து பதிவுகளை சரி செய்வதையும் பார்த்தால், எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று, பா.ஜ., தலைவர்கள் எங்களிடம் கூறி உள்ளனர்.
பெங்களூரில் பல வரலாற்றை கொண்ட தொகுதி சாம்ராஜ்பேட்டையாகும். அனைவரையும் சமமாக எடுத்து கொள்ள, நாங்கள் பாடுபடுவோம். பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. இந்தாண்டுக்குள் மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு சிவகுமார் கூறினார்.

