மேகதாது அணைக்கு ஒப்புதல் கோரி பிரதமர் மோடிக்கு தேவகவுடா கடிதம்
மேகதாது அணைக்கு ஒப்புதல் கோரி பிரதமர் மோடிக்கு தேவகவுடா கடிதம்
UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 10:34 PM

பெங்களூரு: மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் தர வேண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. மாநிலத்தின் வழக்கமாக பெய்யக்கூடிய மழையில் 60 சதவீதம் மட்டுமே பெய்தது.
மழை பற்றாக்குறையால், அணைகளில் நீரின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீரின் அளவு குறைவாக இருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இருப்பினும், கோடைக்காலத்தில் பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அணைகளில் உள்ள நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வாய்ப்பில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளின்படி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டால், கர்நாடகாவில் உள்ள அணைகள் முழுதும் வற்றிவிடும். இதனால், குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
பெங்களூரில் குடிநீர் பஞ்சம் வராமல் இருப்பதற்காக மேகதாதுவில் அணை கட்ட விரைந்து ஒப்புதல் தர வேண்டும். தேசிய நீர் மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்டு வரும் கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதி இணைப்பு திட்டத்தில், கர்நாடகாவிற்கு அதிகளவு நீர் ஒதுக்கப்பட வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம், வரம்புகள் திருத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
