மைசூரு மார்க்கெட்டில் அமைச்சர் ‘ரெய்டு’ எடை குறைவு இயந்திரங்கள் பறிமுதல்
மைசூரு மார்க்கெட்டில் அமைச்சர் ‘ரெய்டு’ எடை குறைவு இயந்திரங்கள் பறிமுதல்
UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 10:46 PM

மைசூரு: மைசூரு ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில் அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் நேற்று திடீர், ‘ரெய்டு’ நடத்தினார். அப்போது, எடை குறைவாக காட்டிய 50க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மைசூரு பண்டிபாளையாவில் உள்ள ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில் உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், நேற்று திடீர் சோதனை செய்தார்.
அப்போது, சந்தையில் விவசாயிகள் விற்கும் பொருட்களை எடை போடுவதில் மோசடி நடக்கிறதா என்பதை ஆய்வு செய்தார். அனைத்து கடைகளிலிருந்த எடை இயந்திரங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
எடை குறைவாக காண்பித்து, விவசாயிகளை ஏமாற்றி வந்த 50க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அமைச்சரின் திடீர் சோதனை மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின், ரிஸ்வான் அர்ஷத் அளித்த பேட்டி:
விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதே மாநில அரசின் நோக்கம். இதனால், எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஸ் கட்டண உயர்வுக்கும், பால் விலை உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இரண்டும் தனித்தனி துறைகள். ரேஷன் அரிசியை கடத்துவோர் மீதும், ஒழுங்காக பணியாற்றாத ரேஷன் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெட்ரோல் நிலையங்களில் வழங்கப்படும் பெட்ரோலில் எத்தனால் கலப்படம் இருப்பது எனது கவனத்திற்கு வந்தது. 100க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. பெட்ரோலில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக எத்தனால் கலந்து இருந்தது தெரிந்தது.
இது, தொடர்பான அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளேன். அறிக்கையின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாநில அரசே நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
