/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கின் விசாரணை அறிக்கை தாக்கல்
/
தர்மஸ்தலா வழக்கின் விசாரணை அறிக்கை தாக்கல்
ADDED : டிச 11, 2025 06:02 AM

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை, அரசிடம், எஸ்.ஐ.டி., தாக்கல் செய்து உள்ளது. பணத்தாசையில் சின்னையா பொய் புகார் அளித்தது பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.
தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, சின்னையா என்பவர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, கடந்த ஜூலை மாதம் அரசு உத்தரவிட்டது.
சின்னையா அடையாளம் காட்டிய இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள் கிடைக்கவில்லை. பொய் புகார் அளித்த அவர் கைது செய்யப்பட்டார்.
மஞ்சுநாதா கோவில், கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, சின்னையா மூலம் சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகை பெல்தங்கடியை சேர்ந்த ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், தர்மஸ்தலாவில் 2012ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, கல்லுாரி மாணவி சவுஜன்யா மாமா விட்டல் கவுடா, சிக்கமகளூரின் சுஜாதா பட் ஆகியோருக்கு இந்த சதியில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இவர்கள் உட்பட பலரிடம் எஸ்.ஐ.டி., விசாரணை நடத்தியது.
கடந்த மாதம் சின்னையா உட்பட 6 பேர் மீதும், பெல்தங்கடி நீதிமன்றத்தில் 3,923 பக்க குற்றப்பத்திரிகையை, எஸ்.ஐ.டி., தாக்கல் செய்தது. ஆறு பேரும் சதிகாரர்கள் என்றும் அறிக்கையில் இருந்தது.
இந்நிலையில் மாநில போலீஸ் டி.ஜி.பி.,யிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள், தர்மஸ்தலா வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான, முதற்கட்ட விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்து உள்ளனர்.
உறுதி இந்த அறிக்கையில் பணத்திற்கு ஆசைப்பட்டு சின்னையா பொய் கூறியது; அவரை பொய் பேச வைத்து மகேஷ் திம்மரோடி கும்பல் வீடியோ எடுத்தது; மண்டை ஓடுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டன; எங்கெங்கு சென்று யார், யாரை சந்தித்தனர் என்பது உட்பட, பல தகவல்கள் இடம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கை குறித்து பெலகாவியில் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ''தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அறிக்கையில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. பின், அதை பற்றி பேசுகிறேன்,'' என்றார்.
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''தர்மஸ்தலாவின் வரலாறு பற்றி எனக்கு முன்பே தெரியும். இதனால் தான் இந்த வழக்கில் சதி நடப்பதாக நான் உறுதியாக கூறினேன்,'' என்றார்.
நகர நக்சல்கள் எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''தர்மஸ்தலாவுக்கு எதிராக சதி நடப்பதாக, நாங்கள் முன்பு இருந்தே கூறி வருகிறோம். இந்த சதியின் பின்னணியில் கண்ணுக்கு தெரியாத வெளிநாட்டு சக்திகள் உள்ளனர்.
நகர நக்சல்களும் இருக்கின்றனர். சிறப்பான விசாரணை நடத்திய, எஸ்.ஐ.டி.,க்கு நன்றி. இந்த சதிக்கு மூளையாக இருக்கும் திமிங்கலத்தை கைது செய்ய வேண்டும். பெயர் எடுத்த கோவில்கள் மீதே பழி சொல் சொல்லும் கும்பல், கிராமங்களில் உள்ள கோவில்களையும் விட்டு வைக்க மாட்டார்கள்,'' என்றார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர். அறிக்கையில் என்ன உள்ளது என்பதை வெளிப்படுத்துவோம். இதில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் போது விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்,'' என்றார்.

