/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டுக்கு பணம் கொடுத்தனரா? முதல்வர், துணை முதல்வர் மீது புகார்
/
ஓட்டுக்கு பணம் கொடுத்தனரா? முதல்வர், துணை முதல்வர் மீது புகார்
ஓட்டுக்கு பணம் கொடுத்தனரா? முதல்வர், துணை முதல்வர் மீது புகார்
ஓட்டுக்கு பணம் கொடுத்தனரா? முதல்வர், துணை முதல்வர் மீது புகார்
ADDED : ஆக 20, 2025 11:43 PM

லோக்சபா தேர்தலின் போது, எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா பேசியதாக கூறப்படும் ஆடியோ பரவியது குறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மீது, மத்திய தேர்தல் ஆணையத்தில், வக்கீல் தேவராஜே கவுடா புகார் அளித்துள்ளார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ஹாசன் தொகுதியில் ஷ்ரேயஸ் படேல், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
சில நாட்களுக்கு முன், ஊடகத்தினர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் இப்ராகிம், 'பாதாமி தொகுதியில் சித்தராமையாவின் வெற்றிக்காக, 3,000 ஓட்டுகள் விலைக்கு வாங்கப்பட்டன.
நானும், சிம்மனகட்டியும், கடன் பெற்று ஓட்டுகள் வாங்கினோம். இதனால் சித்தராமையா வெற்றி பெற்றார்' என கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே லோக்சபா தேர்தலில், ஹாசன் தொகுதியில் ஷ்ரேயஸ் படேலுக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., சந்திரசேகர் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டதாக, ஹாசன், அரசிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா போனில் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக, வக்கீல் தேவராஜே கவுடா, மத்திய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து உள்ளார். நேற்று டில்லிக்கு சென்று, ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
டில்லியில் தேவராஜே கவுடா அளித்த பேட்டி:
ஓட்டுக்கு பணம் கொடுத்தது குறித்து, வெளியான ஆடியோ அடிப்படையில், ஆடியோ கிளிப், ஆவணங்களுடன் சி.பி.ஐ.,யில் புகார் அளித்திருந்தேன்.
நான் அளித்த புகாரை, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு, சி.பி.ஐ., மாற்றி உள்ளது. புகார் தொடர்பாக தகவல் தெரிவிக்கும்படி, தேர்தல் ஆணையத்தில் இருந்து எனக்கு இ - மெயில் வந்தது.
எனவே டில்லிக்கு வந்தேன். தேர்தல் ஆணையத்திடம் ஆதாரங்களை தாக்கல் செய்தேன். ஆவணங்களில் முதல்வர், துணை முதல்வரின் பெயரும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -