பட்டாசு வெடிப்பதில் தகராறு தேர்பவனி பாதியில் நிறுத்தம்
பட்டாசு வெடிப்பதில் தகராறு தேர்பவனி பாதியில் நிறுத்தம்
UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 07:05 PM
மைசூரு: நஞ்சன்கூட்டில் சித்தேஸ்வரா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட சண்டையில், கல் வீசி தாக்கியதில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின் தொட்டகாவலண்டே பேரூராட்சியில் கார்யா கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள மலையில் ஸ்ரீ சித்தேஸ்வர கோவில் உள்ளது. சித்தேஸ்வரா திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் தேர் ஊர்வலம் நடந்தது.
மலையில் இருந்து கீழே வந்த தேர் வந்த போது, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கூறியவருடன், பட்டாசு வெடித்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொண்டனர். இதில், மூன்று வயது குழந்தை அபி, ஆனந்த், பரத் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து, காவலந்தே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பசவராஜு கூறுகையில், ‘‘பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது; இரவே வீடு திரும்பி விட்டனர்,’’ என்றார்.
