உயர் ஜாதியினர் ஓட்டு வேண்டாம்: காங்., பிரதீப் ஈஸ்வர் அதிரடி
உயர் ஜாதியினர் ஓட்டு வேண்டாம்: காங்., பிரதீப் ஈஸ்வர் அதிரடி
UPDATED : அக் 12, 2026 12:50 AM
ADDED : அக் 11, 2026 10:46 PM

சிக்கபல்லாபூர்: ''உயர் ஜாதியினர் ஓட்டு எனக்கு வேண்டாம்,'' என, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கூறியுள்ளார்.
சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், சிந்தாமணி காங்கிரஸ் எம்.எல்.ஏ., - எம்.சி.சுதாகர் இடையில் பகிரங்க மோதல் வெடித்துள்ளது. சுதாகருக்கு எதிராக தினமும் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், பிரதீப் ஈஸ்வர் கருத்து பதிவிடுகிறார்.
இந்நிலையில் பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிக்கபல்லாபூர் தொகுதிக்கு நான் தான் தலைவர். என் தொகுதியில் இன்னொருவரின் தலையீடு இருப்பதை, நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நான் யாருடைய வம்புக்கும் செல்வது இல்லை.
என்னை சீண்ட நினைத்தால் சும்மா விட மாட்டேன். எனது தொகுதியில் ஒருவரின் தலையீடு இருந்ததால், உள்ளூர் அளவில் நடந்த தேர்தல்களில், காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்று விட்டனர்.
நான் வெறும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்து எம்.எல்.ஏ., ஆனவன். என் மீது பலர் கோபத்தில் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகமான பலிஜா சமூகத்தை சேர்ந்த, என்னை அரசியல்ரீதியாக முடிக்க சதி நடக்கிறது. அடுத்த தேர்தலில் எனக்கு உயர் ஜாதியினர் ஓட்டு வேண்டாம். அவர்கள் ஓட்டு வெறும் 18,000 மட்டும் தான். தலித் ஓட்டுகள் ஒரு லட்சம் உள்ளன.
30,000 முஸ்லிம்கள், 17,000 குருபா, 25,000 பலிஜா ஓட்டுகள் உள்ளன. அந்த ஓட்டுகள் எனக்கு கிடைத்தாலே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
