/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் டாக்சிக்கு விதித்த தடையை நீக்க ராகுலுக்கு ஓட்டுநர்கள் கடிதம்
/
பைக் டாக்சிக்கு விதித்த தடையை நீக்க ராகுலுக்கு ஓட்டுநர்கள் கடிதம்
பைக் டாக்சிக்கு விதித்த தடையை நீக்க ராகுலுக்கு ஓட்டுநர்கள் கடிதம்
பைக் டாக்சிக்கு விதித்த தடையை நீக்க ராகுலுக்கு ஓட்டுநர்கள் கடிதம்
ADDED : ஜூன் 15, 2025 11:29 PM
பெங்களூரு: இன்று முதல் கர்நாடகாவில் பைக் டாக்சி ஓட அனுமதி இல்லாததால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, பைக் டாக்சி ஓட்டுநர்கள், கடிதம் எழுதி உள்ளனர்.
பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் பைக் டாக்சி ஓட்ட, மாநில அரசு தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி, அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தார்.
இதற்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வு முன், மேல்முறையீடு செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்ததுடன், விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, பைக் டாக்சி ஓட்டுநர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் ஒரு லட்சம் பைக் டாக்சி ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வேலையை நம்பி தான் எங்கள் குடும்பம் உள்ளது.
பைக் டாக்சி ஓட்டுநர்களாக மாணவர்கள், தினசரி தொழிலாளர்கள், உதவியாளர்கள், பெற்றோர் நம்பி உள்ளனர். கொரோனாவுக்கு பின் எங்களுக்கு வேறு வேலை கிடைக்காததால், இப்பணியை செய்து வருகிறோம்.
வாரத்தில் ஏழு நாட்களும் 10 முதல் 12 மணி நேரம் உழைத்தால் மட்டுமே எங்களின் குடும்பத்தை நடத்த முடியும். நாங்கள் வெயில், மழை, போக்குவரத்து நெரிசல் என அனைத்து நேரத்திலும் நகர் முழுதும் காலை முதல் இரவு வரை பணியாற்றுகிறோம்.
இதில் கிடைக்கும் பணத்தில் தான் வீட்டு வாடகை, குழந்தைகள் பள்ளி கட்டணம், மருத்துவ பில்களுக்கு பயன்படுத்தி கொள்கிறோம். இது எங்களுக்கு 'பாக்கெட் மணி'க்காக அல்ல.
பைக் டாக்சிக்கான பயிற்சி, காப்பீடு, அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை வகுக்காமலும், இதனால் பைக் டாக்சி ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவர் என்பதை யோசித்து கூட பார்க்காமல், போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
உங்களின் தலைமையின் கீழ் நடக்கும் காங்., ஆட்சியில், கர்நாடகாவில் உள்ள எங்களை போன்ற பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு சமூக பாதுகாப்பு, நல வாரியம், காப்பீடு வழங்கப்பட்டு உள்ளன.
இது எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. ஆனால் இன்றோ, இவை அனைத்தும் உடைந்துவிட்டது. பணி செய்ய விடவில்லை என்றால், இந்த சலுகைகள் எதற்கு.
இது எங்களுக்கு மட்டுமல்ல, வாடிக்கையாளர்களையும் பாதிக்கிறது. பல பைக் டாக்சிகள் விரைவாகவும், குறைந்த கட்டணத்திலும் இயக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு இந்த சேவை வசதியாக உள்ளது. ஆண்டுக்கு 8 கோடி 'டிரிப்'கள் செல்லும் எங்களுக்கு, யார் உதவுவார்கள். எனவே, பைக் டாக்சிக்கு விதித்த தடையை நீக்க மறுபரிசீலனை செய்யும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டு உள்ளனர்.