/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவ துறையில் சாதனைக்கு தயாராகும் 'ட்ரோன்'
/
மருத்துவ துறையில் சாதனைக்கு தயாராகும் 'ட்ரோன்'
ADDED : அக் 18, 2025 11:06 PM

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே சாத்தியம் எனலாம். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன் போன்றவை உலகையே மிரட்டி வருகின்றன. அதே போல ட்ரோன் தொழில்நுட்பத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக, நம் ராணுவத்தில் வரும் காலங்களில் ட்ரோன்களின் பங்கு அதிகமாக இருக்கும் எனலாம். இதற்கு காரணம் ஆளில்லா ட்ரோன், சூசைட் ட்ரோன் என பல வகையான ட்ரோன்களை நம் ராணுவம் உருவாக்கி கொண்டு வருகிறது.
இந்த ட்ரோன்கள் ராணுவத்திற்கு மட்டும் அல்ல; மாறாக மருத்துவ துறையில் பயன்பட துவங்க உள்ளன. அதுவும் பெங்களூரில் முதன் முதலாக மருத்துவ சேவையில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதை பெங்களூரில் உள்ள 'ஏர்பவுண்ட்' நிறுவனம் துவக்கி உள்ளது. இந்த நிறுவனம் ட்ரோன் சேவை குறித்து நாராயணா ஹெல்த் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
நோயாளிகளுக்கு விரைந்து மருந்துகளை டெலிவரி செய்யவும், மருத்துவமனை, கிளினிக்குகளுக்கு உடனடியாக டெலிவரி செய்யும் ட்ரோன் பயன்படுத்த உள்ளது.
இந்த ட்ரோனின் எடை 2.50 கிலோ. இது 120 அடி உயரம் வரை பறக்கும். ஒரு கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து சொல்லும். காற்று, மழை என அனைத்திலிருந்தும் தற்காத்து கொள்ளும். ஜி.பி.எஸ்., கேமரா பொருத்தப்பட்டு உள்ளன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கி.மீ.,. இது 40 கி.மீ., துாரம் வரை பறந்து செல்லும்.
இது குறித்து ஏர்பவுண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நமன் புஷ்பக் கூறியதாவது:
போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, ட்ரோன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நாராயணா ஹெல்த் நிறுவனத்துடன் மூன்று மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்து உள்ளோம். ஒரு நாளைக்கு 10 முறை ட்ரோன் மூலம் மருந்துகள் கொண்டு செல்லப்படும். அடுத்த ஆண்டு முதல் அதிகப்படுத்தப்படும். இதன் மூலம் ஆபத்தான நோயாளிகளின் உயிரை காப்பாற்றலாம். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாராயணா ஹெல்த் நிறுவனர் தேவி ஷெட்டி கூறுகையில்,''ட்ரோன் மூலம் அத்தியாவசிய மருந்து பொருட்கள் கொண்டு செல்வது முன்னோடி திட்டமாகும். நோயாளிகள் உயிரை காப்பதே முக்கியம்,'' என்றார்.
- நமது நிருபர் -

