/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐஸ்வர்யாவிடம் ஈ.டி., விசாரிக்க வாய்ப்பு
/
ஐஸ்வர்யாவிடம் ஈ.டி., விசாரிக்க வாய்ப்பு
ADDED : பிப் 18, 2025 06:08 AM

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, பலரிடம் மோசடி செய்த வழக்கில், ஐஸ்வர்யா கவுடாவிடம், அமலாக்கத்துறை விசாரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மாண்டியா மலவள்ளி கிருகாவலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா. காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக்கடை ஒன்றில் 8 கோடி ரூபாய் நகை வாங்கி மோசடி செய்த வழக்கில் ஐஸ்வர்யா கவுடா, 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவர் ஜாமினில் வெளியே உள்ளார். அவர் மீது மேலும் சில மோசடி வழக்குகள் பதிவாகின.
அரசியல் தலைவர்கள் சிலரின் மொபைல் போன் அழைப்புகளை சட்டவிரோதமாக பெற்றதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு ஆகி உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
ஐஸ்வர்யாவின் வங்கிக் கணக்கு புத்தகங்களை போலீசார் ஆய்வு செய்தபோது கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 கோடி ரூபாய்க்கு மேல், அவர் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுடன் நிதி பரிவர்த்தனை செய்ததும் தெரிந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், அவரது வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்றும் விசாரணை அதிகாரி பரத் ரெட்டி, பெங்களூரு அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில், விரைவில் அமலாக்கத்துறை சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

