ADDED : ஜூலை 02, 2026 11:11 PM
கொப்பால்: இளைஞரை கடத்தி சென்று பணம் பறிக்க முயற்சித்த, அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
விஜயபுரா நகரின் கஸ்துாரி லே - அவுட்டில் வசிப்பவர் சாஹில், 22. இவர் விஜயபுரா அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவரது குடும்பத்தினர் சமீபத்தில், 2 ஏக்கர் நிலத்தை விற்று, 26 லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தனர். இவ்விஷயம், சாஹிலுடன் அதே மருத்துவமனையில் பணியாற்றும் ரபீக்குக்கு தெரிந்தது. இவர் தன் கூட்டாளி கோபாலுடன் இணைந்து, சாஹிலிடம் பணம் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டினார்.
இதன்படி, இளம் பெண் ஒருவரை சாஹிலுக்கு அறிமுகம் செய்தனர். இருவரையும் நெருக்கமாக பழக வைத்தனர். ஜூன் 18ம் தேதியன்று, இரவு 8:00 மணிக்கு இளம்பெண் சாஹிலுக்கு போன் செய்து, அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள காலியிடத்துக்கு வரும்படி கூறினர். அவரும் வந்தார்.
அப்போது அங்கு காத்திருந்த கோபாலும், அவரது கூட்டாளிகளும், சாஹிலை காரில் கடத்தி சென்றனர். விஜயபுராவில் இருந்து கதக், கோவா வழியாக பெலகாவிக்கு வந்தனர். இங்குள்ள கட்ட பிரபா அருகில் அடைத்து வைத்திருந்தனர்.
இதற்கிடையே, சாஹிலின் தாய்க்கு போன் செய்து, 12 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். மகன் கடத்தப்பட்டதை அறிந்து, பீதியடைந்த பெற்றோர், காந்திசவுக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் சிறப்பு படை அமைத்து, கடத்தல்காரர்களை தேட துவங்கினர். மொபைல் அழைப்புகள் நெட் ஒர்க் அடிப்படையில், கட்டபிரபா அருகில் கடத்தல்காரர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
ஜூன் 21ல் அங்கு சென்று, சுற்றி வளைத்து, சாஹிலை மீட்டனர். இவர்களிடம், தீவிரமாக விசாரித்த போது, சாஹில் கடத்தலின் பின்னணியில், சக ஊழியர் ரபீக் இருப்பது தெரிந்தது. கடத்தல் தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
