/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடைபாதை ஆக்கிரமிப்பு: அதிகாரிகளுக்கு உத்தரவு
/
நடைபாதை ஆக்கிரமிப்பு: அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூன் 10, 2025 02:21 AM

மஹாதேவபுரா: நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.
பெங்களூரு மஹாதேவபுரா மண்டலத்தில் உள்ள சீதாராம்பாளையா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பி.இ.எம்.எல்., லே - அவுட் வரை உள்ள நடைபாதைகளில் நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் ஆய்வு நடத்தினார்.
அப்போது, மண்டல ஆணையர் ரமேஷ், நிர்வாக பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள் என அதிகாரிளுக்கு பல உத்தரவுகளை வழங்கினார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஐ.டி.பி.எல்., பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் விழுந்து கிடந்த மரம் உட்பட முறிந்து விழும் நிலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்துதல்; காலி மது பாட்டில்களை நடைபாதையில் போடும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை; அனுமதியின்றி கடைக்காரர்கள் வைக்கும் விளம்பர பலகைகள் அகற்றுதல்;
அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கழிவுநீர், வடிகால்கள் வழியே வெளியேற்றப்படுவது குறித்து விசாரணை; பிரிகேட் டெக் கார்டன் நடைபாதையின் குறுக்கே இருந்த தடுப்புகளை அகற்றி, சமமான நடைபாதையை உருவாக்குதல்;
நடைபாதைகளிலும், சாலைகளிலும் கழிவுகளை வீசுவோருக்கு அபராதம் விதிப்பது.
சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்துதல்;
நடைபாதைகள் பராமரிப்புக்காக சிறப்பு குழு; மண்டல கமிஷனர்கள் தங்கள் மண்டலங்களில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தல்; குடியிருப்பு பகுதிகளில் நடைபாதைகள் 1.8 மீட்டர் அகலம்; வணிக பகுதிகளில் 2.5 மீட்டர் அகலப்படுத்துதல்;
தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் வளாகத்தின் முன்னுள்ள நடைபாதைகளை, தாமாக முன்வந்து அமைக்கும் வகையில் துறை ரீதியான நடவடிக்கைகள்;
சாலையோரத்தில் உள்ள கேட்டுகள் உட்புறமாக திறக்கும் வகையில் அமைத்தல்; வெளிப்புறமாக திறக்கும் வகையில் அமைத்தால் அபராதம் விதித்தல்; இந்த விதியை கட்டாயமாக்குவது குறித்து அனைத்து மண்டல கமிஷனர்களும் ஆய்வு செய்வது அவசியம்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.