முன்னாள் கார் டிரைவர் மீது துப்பாக்கி சூடு: தொழிலதிபர் கைது; 3 பேரிடம் விசாரணை
முன்னாள் கார் டிரைவர் மீது துப்பாக்கி சூடு: தொழிலதிபர் கைது; 3 பேரிடம் விசாரணை
UPDATED : அக் 16, 2026 12:02 AM
ADDED : அக் 15, 2026 10:34 PM

கோனனகுண்டே: முன்விரோதத்தில், முன்னாள் கார் டிரைவர் காலில் துப்பாக்கியால் சுட்ட, தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் விசாரணை நடக்கிறது.
பெங்களூரு கோனனகுண்டேயில் வசிப்பவர் சம்பங்கி, 47. தொழிலதிபர். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரிடம் சீனிவாஸ் என்ற சீனா, 42, கார் டிரைவராக வேலை செய்தார். இருவருக்கும் இடையே, தனிப்பட்ட விஷயங்களால் தகராறு ஏற்பட்டது. சீனிவாஸை வேலையில் இருந்து சம்பங்கி நிறுத்தினார்.
இந்நிலையில், சீனிவாஸ் தன்னை அரிவாளால் தாக்கியதாக, கடந்த மாதம் சம்பங்கி, போலீசில் புகார் செய்தார். சீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவரை தேடினர்.
நேற்று முன்தினம் இரவு 'நைஸ்' சாலையின் பில்லகனஹள்ளி பகுதியில், சீனிவாஸ் பைக்கில் சென்றார். அந்த வழியாக சம்பங்கி, அவரது நண்பர்கள் 3 பேர் காரில் சென்றனர். பைக்கை வழிமறித்த சம்பங்கி, நண்பர்கள், சீனிவாசிடம் தகராறு செய்து அவரை தாக்கினர்.
திடீரென காரில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்த சம்பங்கி, சீனிவாஸ் காலில் சுட்டார். குண்டு காலில் பாய்ந்தது. சாலையில் படுத்து உருண்டார்.
அந்த வழியாக வந்தவர்கள், சீனிவாசை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரில் சம்பங்கி நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் மூவரை போலீஸ் தேடுகிறது.
