ADDED : ஏப் 11, 2025 06:45 AM
பெங்களூரு: கடந்த இரண்டு ஆண்டுகளாக, கலால் துறை வருவாய் குறைந்து வருகிறது. இலக்கை எட்டுவதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர். 2024 - 25ல் 2,995 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசு கருவூலத்துக்கு, அதிக வருவாய் கொண்டு வருவதில், கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
நிர்ணயித்த இலக்கை விட அதிக வருவாய் வசூலிப்பது வழக்கம். கொரோனா நேரத்தில், பல துறைகள் வருவாய் இல்லாமல் தத்தளித்தன.
ஆனால் கலால் துறை அதிகமான வருவாய் ஈட்டி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மாநில அரசுக்கு கை கொடுத்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கலால் துறையின் வருவாய் குறைந்துள்ளது. எதிர்பார்த்த சாதனை செய்யவில்லை. 2023 - 24ல், 36,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; 34,628 கோடி ரூபாய் வருவாய் வசூலானது. 2024 - 25ல், 38,525 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; 35,530 கோடி ரூபாய் வசூலானது. 2,995 கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது.
கலால் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மதுபான விற்பனை 2023 - 24ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2024 - 25ம் ஆண்டு அதிகரித்தது. 2023 - 24ம் ஆண்டில் 705.53 லட்சம் பெட்டிகள் உள்நாட்டு மதுபானம், 444.05 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையானது. 2024 - 25ம் ஆண்டில் 708.85 லட்சம் உள்நாட்டு மதுபானம், 450 லட்சம் பெட்டிகள் பீர் விற்கப்பட்டன.
ஆனால் பீர் விற்பனை படிப்படியாக குறைந்துள்ளது. 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை பீர் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. விலை அதிகரித்ததே, விற்பனை குறைய காரணம்.
கலால் துறைக்கு ஆண்டுக்கு ஆண்டு, பட்ஜெட்டில் வருவாய் இலக்கை அரசு அதிகரிப்பதும், மதுபான விலை அதிகரித்ததும் கூட, வருவாய் குறைய முக்கிய காரணமாகும்.
பீர் விற்பனை அதிகரித்தால் வருவாய் அதிகரிக்கும். இலக்கை எட்டவும் துறைக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

