கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தில் வெடிவிபத்து: ராய்ச்சூரில் ஒருவர் கைது
கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தில் வெடிவிபத்து: ராய்ச்சூரில் ஒருவர் கைது
UPDATED : அக் 25, 2026 12:00 AM
ADDED : அக் 24, 2026 09:44 PM
பெங்களூரு: பெங்களூரில் கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தில் நடந்த வெடி சம்பவம் தொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரின், புலிகேசிநகரின், ஜர்மியா சாலையில், புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது. இந்த கட்டடத்தின் நான்காவது மாடியில், அக்டோபர் 20ம் தேதியன்று பயங்கர சத்தத்துடன், வெடிச்சத்தம் கேட்டது.
வெடித்ததன் தீவிரத்தில் கட்டட காவலாளி அலாவுதீன், தொழிலாளி சூரஜ் ஆகியோரின் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமாக சம்பவம் நடந்ததால், அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஏ.டி.எஸ்., எனும் பயங்கரவாத தடுப்பு படை, உள் கட்டமைப்பு பாதுகாப்பு படை, வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, சோதனை நடத்தினர். டைமர், ஒயர் உட்பட, பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ராய்ச்சூர் மாவட்டம், மஸ்கியில் ஜலால் என்பவரை, கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின், ராமமூர்த்தி நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், புலிகேசி நகரில் ஏழு மாடி கட்டடம் கட்டுகிறார். முதல் இரண்டு மாடிகளில், வர்த்தக கட்டடங்கள் உள்ளன. மற்ற மாடிகளில் வீடுகள் கட்டப்படுகின்றன. அக்டோபர் 20ம் தேதியன்று, மதியம் 1:30 மணியளவில் காவலாளி அலாவூதின் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இவருக்கு யாரோ ஒரு நபர் போன் செய்து, பார்சல் அனுப்பியுள்ளதாக கூறினார். பேட்டரி போன்ற பொருள் இருந்த பார்சலை பெற்று கொண்ட அலாவூதீனும், ஏழாவது மாடியில் இருந்த சூரஜை, ஐந்தாவது மாடிக்கு வரவழைத்து, பார்சலை பார்க்கும்படி கூறினார்.
பார்சலை பிரித்த அவர், சுவிட்சை போட்ட போது, வெடித்தது. இதில் இருவரும் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.
சம்பவம் தொடர்பாக, ராய்ச்சூரின், மஸ்கியில் ஜலால் என்பவரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிறகே, கூடுதல் தகவல் தெரியும்.
சம்பவ இடத்தில் கிடைத்த டைமர், ஒயர், பேட்டரிகளை கைப்பற்றி, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
