/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆறு மாத பெண் குழந்தை இறந்த வழக்கில் போலி டாக்டர் கைது
/
ஆறு மாத பெண் குழந்தை இறந்த வழக்கில் போலி டாக்டர் கைது
ஆறு மாத பெண் குழந்தை இறந்த வழக்கில் போலி டாக்டர் கைது
ஆறு மாத பெண் குழந்தை இறந்த வழக்கில் போலி டாக்டர் கைது
ADDED : ஜூன் 13, 2025 11:22 PM

ராம்நகர்: ஊசி போடப்பட்டதால் ஆறு மாத பெண் குழந்தை இறந்தது. இதுதொடர்பாக போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ராம்நகர் டவுனில் உள்ள சாமுண்டீஸ்வரி லே - அவுட்டில் வசிப்பவர் சிவராஜ். இவரது மனைவி ரோஜா. தம்பதிக்கு ரோஜா என்ற பெயரில், ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 10ம் தேதி இரவு குழந்தையின் வலது தொடையில், கட்டி இருந்ததை பெற்றோர் கவனித்தனர்.
முகமது சைபுல்லா, 45, என்பவர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு, குழந்தையை துாக்கிச் சென்றனர். குழந்தைக்கு டாக்டர் ஊசி போட்டுள்ளார். வீட்டிற்கு சென்றதும் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது.
டாக்டரிடம் மொபைல் போனில், சிவராஜ் பேசி உள்ளார். குழந்தை அழுது கொண்டே இருப்பது பற்றி கூறி இருக்கிறார். “ஒன்றும் பிரச்னை இல்லை; துாங்கினால் குழந்தை சரியாகி விடும்,” என, டாக்டர் கூறி இருக்கிறார். ஆனாலும் இரவு முழுதும் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது.
மறுநாள் காலை இன்னொரு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றபோது, மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. குழந்தையை பரிசோதித்த டாக்டர், “குழந்தைக்கு போட்ட ஊசியில், மருந்து அதிகம் சேர்த்தது காரணம்,” என்று கூறி உள்ளார்.
குழந்தைக்கு சிகிச்சை அளித்த பின், ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து முகமது சைபுல்லா மீது, ராம்நகர் டவுனில் போலீசில் சிவராஜ் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.
குழந்தை இறந்தது பற்றி அறிந்த மாவட்ட சுகாதாரத்துறையினர், முகமது சைபுல்லா நடத்தி வந்த கிளினிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது முகமது சைபுல்லா போலி டாக்டர் என்பதும்; கொல்கட்டாவில் ஒரு கிளினிக்கில் நர்சாக வேலை செய்துவிட்டு, இங்கு வந்து கிளினிக் நடத்தி தன்னை டாக்டர் என்று கூறியதும் தெரிய வந்தது.
“அவரது கிளினிக்கில் உள்ள மருந்துகள் பறிமுதல் செய்யப்படும்,” என, மாவட்ட சுகாதார அதிகாரி நிரஞ்சன் கூறி உள்ளார்.