/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேவனஹள்ளி ரயில் முனையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!: உயிரே போனாலும் நிலம் தர மாட்டோம் என ஆவேசம்
/
தேவனஹள்ளி ரயில் முனையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!: உயிரே போனாலும் நிலம் தர மாட்டோம் என ஆவேசம்
தேவனஹள்ளி ரயில் முனையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!: உயிரே போனாலும் நிலம் தர மாட்டோம் என ஆவேசம்
தேவனஹள்ளி ரயில் முனையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!: உயிரே போனாலும் நிலம் தர மாட்டோம் என ஆவேசம்
ADDED : பிப் 18, 2025 06:07 AM

பெங்களூரு: தேவனஹள்ளி அருகில், 46 பிளாட்பார்ம்கள் கொண்ட புதிய ரயில்வே முனையம் அமைக்கும் திட்டத்துக்கு, அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'உயிரே போனாலும், எங்கள் நிலங்களை தர மாட்டோம்' என, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
கர்நாடக தலைநகரான பெங்களூரின் எல்லை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது. அதேவேளையில், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தவே, மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், நெரிசல் மட்டும் குறையவில்லை.
புறநகர் ரயில்
இதை சரி செய்ய, புறநகர் ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. இதற்கு, 2019ல் மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டில் ஒப்புதல் அளித்தது. 2022 முதல், 'மல்லிகே, கனகா, சம்பங்கி, பாரிஜாதா' என நான்கு வழித்தடங்களில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
முதல் கட்டமாக, 'மல்லிகை, கனகா' ஆகிய வழித்தடங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் 2027க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்திற்கு அதிக எண்ணிக்கையில் ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு போதுமான பிளாட்பார்ம்கள் இல்லை. நகருக்குள் கூடுதல் நிலம் கையகப்படுத்தி, ரயில் நிலையத்தை விரிவுபடுத்தவும் முடியாது. எனவே, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, புறநகரில் உள்ள தேவனஹள்ளியில் புதிய ரயில்வே முனையம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, தேசிய நெடுஞ்சாலை 44க்கு அருகில் உள்ள புல்லஹள்ளி, வெங்கடகிரி கோட்டே, தட்டம்மசன்னஹள்ளி, இரிகேனஹள்ளி, ஜி.ஹோசூர் ஆகிய ஐந்து கிராமங்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இங்குள்ள நிலத்தில், 16 பிளாட்பார்ம்கள், 20 ஸ்டப் லைன் (ரயில் புறப்படவில்லை என்றால் நிற்பதற்கு), 10 பிட் லைன் (ரயிலை சுத்தம் செய்யவும், பராமரிக்கவும்) அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சர்வேயர்கள்
இந்த நிலத்தை அளக்க, சில மாதங்களுக்கு முன் சர்வேயர்கள் சென்றனர். ஆனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஐந்து கிராமத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கிராமத்தினர் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது, 'ஐந்து கிராமங்களில், விவசாய நிலங்களை சர்வே எடுத்து சென்றுள்ளனர். இத்திட்டத்திற்கு 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படும். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எங்கள் உயிரே போனாலும் இத்திட்டத்துக்கு நிலம் தர முடியாது. இதற்கு எதிராக போராடுவோம்.
முதலில் அறிக்கை
'தேவனஹள்ளியில் இருந்து 6 கி.மீ.,யில, பெங்களூரை நிர்மாணித்த கெம்பே கவுடா பிறந்த ஆவதி கிராமம் உள்ளது. ஏற்கனவே புறநகர் ரயில் திட்டத்தால் விவசாய நிலங்கள் பறிபோய் உள்ளன. இதில் ரயில்வே முனையம் அமைக்க இடம் கொடுக்க கூடாது.
'நிலத்தை கைப்பற்ற அதிகாரிகள் வந்தால், அவர்களை வெளியேற்றுவோம். விவசாய நிலத்தில் முனையம் கட்டுவதற்கு பதிலாக, காலியாக உள்ள வேறு இடத்தில் கட்டிக் கொள்ளலாம்' என்று ஆவேசமாக தெரிவித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தேவனஹள்ளியில் பிரமாண்ட ரயில்வே முனையம் அமைக்கும் திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. முனையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை முதலில் தயாரிக்கப்படும்.
இந்த அறிக்கை கிடைத்த பின், ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
வாரியம் ஒப்புதல் அளித்த பின்னரே, நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கும். பெங்களூரு நகரின் எதிர்கால போக்குவரத்து நெரிசல், ரயில் மேலாண்மையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிய முனையம் கட்ட திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில்வே போக்குவரத்து நிபுணர் கிருஷ்ணபிரசாத் கூறுகையில், ''ஏற்கனவே தேவனஹள்ளி அருகில் கெம்பே கவுடா விமான நிலைய ரயில் நிலையம் உள்ளது.
''மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த முனையம் கட்டும் பட்சத்தில், விமான நிலையத்துக்கு வந்து, செல்லும் பயணியருக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும்.
''இதுவே ஹெஜ்ஜாலாவில் கட்டினால், யஷ்வந்த்பூரில் இருந்து ரயிலில் வரும் பயணியருக்கு இன்னும் வசதியாக இருக்கும்,'' என்றார்.

