UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 11:18 PM
மாண்டியா: கரும்புக்கு 5,500 ரூபாய் விலை நிர்ணயிக்க வலியுறுத்தி, மாண்டியாவில் பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில், விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
மாண்டியா மாவட்டம், மேலுகோட்டே எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் படகலபுரா நாகேந்திரா தலைமையில், மாண்டியாவில் பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில், விவசாயிகள் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், பலமணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரும்பு, டன்னுக்கு 5,500 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி விவசாயிகள் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்து, போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னெச்சரிக்கையாக, மாண்டியா எஸ்.பி., ஷோபா ராணி தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடந்த போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகளை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறினர்.
‘கரும்பு விலையை உயர்த்த வேண்டும்; கடனை ரத்து செய்ய வேண்டும்; சர்க்கரை ஆலைகள் கரும்பு எடையில் மோசடி செய்வதை நிறுத்த வேண்டும்’ என, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
மாவட்ட பொறுப்பு அமைச்சர் செலுவராயசாமியின் சமாதானத்தை, பொருட்படுத்தாத விவசாயிகள், பிடிவாதத்துடன் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
