/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலையில் மாம்பழங்களை கொட்டி விவசாயிகள் தர்ணா
/
சாலையில் மாம்பழங்களை கொட்டி விவசாயிகள் தர்ணா
ADDED : ஜூன் 25, 2025 08:50 AM

கோலார் : கோலார் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கொண்டராஜனஹள்ளி கேட் அருகே மாம்பழங்களை கொட்டி விவசாயிகள் தர்ணா செய்தனர்.
கோலார் மாவட்டம் என்றாலே, 'சில்க், மில்க், கோல்ட்' என்று புகழை பெற்றிருந்தது.
தங்கச்சுரங்கம் மூடப்பட்ட பின்னர், கோல்ட் என்ற தங்கநகர் பெயரை மாற்றி, 'மாம்பழ மாவட்டம்' என்று புதிய அத்தியாயத்தை விவசாயிகள் ஏற்படுத்தினர். குறிப்பாக கோலார் மாவட்டத்தில் சீனிவாசப்பூரில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் ஏக்கரில் 40 லட்சம் டன் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது.
இதை அடுத்து தான் ராம்நகர், பெங்களூரு ரூரல், துமகூரு ஆகிய மாவட்டங்களில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
இம்முறை பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே அதிக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மா அதிகளவு பூத்து காய்த்தது. அதிகளவு விளைந்ததால், விவசாயிகள் எதிர்ப்பார்த்த விலை கிடைக்கவில்லை.
பல்வேறு நாடுகளிலும் சாதகமான சூழல் இல்லாததால் மாம்பழ ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. அத்துடன் மாம்பழத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் விதிக்கப்பட்டுள்ளதால் மாம்பழம் ஏற்றுமதி செய்ய, வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை.
பதப்படுத்தும் கிடங்கு வசதியும் கோலார் மாவட்டத்தில் இல்லை. இதனால் மாம்பழங்கள் அழுகியும், தோல் கருப்பாக மாறியும் விற்பனை பாதிக்கப்பட்டது.
இதனால் மாம்பழத்துக்கு ஆதார விலையை மாநில அரசு அறிவிக்கக் கோரி ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை கோலார் - பெங்களூரு நெடுஞ்சாலையில் கொண்டராஜனஹள்ளி கேட் அருகே மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் டிராக்டர்களில் மாம்பழங்களை கொண்டு வந்து சாலையில் கொட்டி தர்ணா செய்தனர். இதனால் இந்த மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால் விதான சவுதாவுக்கு முற்றுகை போராட்டம் நடத்துவோம்,” என, தர்ணாவுக்கு தலைமை வகித்த கோலார் மாவட்ட மாம்பழ உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சின்னப்பா ரெட்டி எச்சரித்தார்.
மாம்பழ ரசம்!
மாம்பழ விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. மாம்பழங்களை கர்நாடக அரசே கொள்முதல் செய்து, பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்துடன் மாம்பழ ரசம் வழங்கும் புதிய திட்டத்தை துவங்கலாம் என்று முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
- ரமேஷ் குமார், முன்னாள் சபாநாயகர்
ஜி.எஸ்.டி., ரத்து செய்யப்படுமா?
கர்நாடகாவில் அதிக மாம்பழங்கள் விளையும் கோலாரில் மாம்பழம் பதனிடும் இரண்டு கிடங்குகளை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். மாம்பழத்துக்கான ஜி.எஸ்.டி., வரியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும். மாம்பழங்களை பதப்படுத்தி பாதுகாப்பதற்கென மத்திய அரசு 50 சதவீதம் நிதியுதவி வழங்குகிறது. தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா 25 சதவீதம் நிதியை அம்மாநில அரசுகள் வழங்குகின்றன. அதேபோல் கர்நாடகாவிலும் மாம்பழங்கள் பதனிட அரசு திட்டம் வகுக்க வேண்டும்.
- மல்லேஸ் பாபு, ம.ஜ.த., - எம்.பி.,