/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வன்முறையாக மாறிய விவசாயிகள் போராட்டம் கரும்பு ஏற்றி சென்ற 30 டிராக்டர்கள் எரிப்பு
/
வன்முறையாக மாறிய விவசாயிகள் போராட்டம் கரும்பு ஏற்றி சென்ற 30 டிராக்டர்கள் எரிப்பு
வன்முறையாக மாறிய விவசாயிகள் போராட்டம் கரும்பு ஏற்றி சென்ற 30 டிராக்டர்கள் எரிப்பு
வன்முறையாக மாறிய விவசாயிகள் போராட்டம் கரும்பு ஏற்றி சென்ற 30 டிராக்டர்கள் எரிப்பு
ADDED : நவ 14, 2025 05:25 AM

பாகல்கோட்: கரும்பு டன்னுக்கு 3,500 ரூபாய் ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி, பாகல்கோட்டின் முதோல் விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. கரும்பு ஏற்றி சென்ற 30 டிராக்டர்களை தீயிட்டு எரித்தனர்.
கர்நாடகாவின் பெலகாவி, பாகல்கோட் மாவட்டங்களில் விளைச்சல் ஆகும் கரும்புகளை, 1 டன்னுக்கு 3,200 ரூபாய் கொடுத்து, சர்க்கரை ஆலைகள் வாங்கின. இது தங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை என்று, விவசாயிகள் கூறினர். 1 டன் கரும்புக்கு 3,500 ரூபாய் ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி, கடந்த மாதம் 31 ம் தேதி பெலகாவியின் முதலகி தாலுகா குர்லாபுரா விவசாயிகள் போராட்டத்தை துவக்கினர்.
பேச்சுவார்த்தை இந்த போராட்டம் பெலகாவி மாவட்டம் முழுதும் பரவியது. போராட்ட களத்தில் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டன. நிலைமை விபரீதம் ஆனதை உணர்ந்த முதல்வர் சித்தராமையா, சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகளுடன் கடந்த 7ம் தேதி ஆலோசனை நடத்தினார். 1 டன் கரும்புக்கு 3,300 ரூபாய் ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், பாகல்கோட் மாவட்ட விவசாயிகளும், கரும்புக்கு 3,500 ரூபாய் ஆதரவு விலை கேட்டு போராட்டத்தை துவக்கினர். அரசு அறிவித்த 3,300 ரூபாயை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக முதோல் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக, முதோல் எம்.எல்.ஏ.,வும், பாகல்கோட் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திம்மாபுரா, முதோலில் தங்கி இருந்து, விவசாயிகளுடன் பேச்சு நடத்தினார். மூன்று முறை பேச்சு நடந்தும், தோல்வியில் முடிந்தது.
நேற்றும் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு, திம்மாபுரா அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல், சைதாபுரா என்ற இடத்தில் உள்ள சர்க்கரை தொழிற்சாலை முன்பு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிர்ணயித்த 3,300 ரூபாய் ஆதரவு விலையை ஏற்று கொண்டு, சர்க்கரை தொழிற்சாலைக்கு டிராக்டர்களில் கரும்பு அனுப்பிய விவசாயிகளிடம், போராட்டம் நடத்திய விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். திடீரென கரும்பு பாரத்துடன் இருந்த, ஒரு டிராக்டரை கவிழ்த்து விட்டனர். நேரம் செல்ல, செல்ல போராட்டம் தீவிரம் எடுத்தது.
கண்ணீர் கரும்பு பாரத்துடன் நின்று கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட டிராக்டர்களுக்கு தீ வைத்தனர். ஒவ்வொரு டிராக்டரிலும் 2 டிரெய்லர்களில் கரும்புகள் இருந்தன. தீ மளமளவென வேகமாக பரவி, கரும்புகள் மீது பிடித்து எரிந்தது. இதனை பார்த்து கரும்பு விவசாயிகள், தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயை அணைக்க முடியாததால், விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதற்கிடையில் அங்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர், டிராக்டர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் பல டன் கரும்புகள் எரிந்து நாசமாகின. இதன்மூலம் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. சம்பவம் குறித்து முதோல் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
திட்டமிட்ட சதி இந்த கலவரம் குறித்து அமைச்சர் திம்மாபுரா கூறுகையில், ''கடந்த ஒரு வாரமாக முதோலில் தங்கி உள்ளேன். விவசாயிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். கரும்பு பார டிராக்டர்களுக்கு தீ வைத்தது துரதிர்ஷ்டவசமானது. தயவு செய்து சட்டத்தை கையில் எடுக்காதீர்கள் என்று, விவசாயிகளை கேட்டு கொள்கிறேன். எதுவாக இருந்தாலும் பே ச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள். உங்களிடம் பேச அரசு தயாராக உள்ளது,'' என்றார்.
சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்தா பாட்டீல் கூறுகையில், ''கரும்பு பாரம் ஏற்றி வந்த, டிராக்டர்கள் மீது விவசாயிகள் தீ வைத்தனர் என்று சொல்வதை நான் நம்பவே மாட்டேன். இது திட்டமிட்ட சதி. தேசிய அளவில் கர்நாடகா பெயரை களங்கப்படுத்த சதி நடக்கிறது. விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
'நாங்கள் டிராக்டர்களுக்கு தீ வைக்கவில்லை. சர்க்கரை ஆலையினர் தான் வைத்தனர்' என்று, முதோலில் போராட்டம் நடத்தும் விவசாயிகளும் கூறி உள்ளனர்.
'விவசாயிகள் போராட்டத்தை அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இது' என்று, காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.சம்பவம் குறித்து முழு விபரத்தையும், பாகல்கோட் எஸ்.பி.,யிடம், முதல்வர் சித்தராமையா கேட்டறிந்தார்.

