/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தந்தை, மகன் தற்கொலை இருவருக்கு தீவிர சிகிச்சை
/
தந்தை, மகன் தற்கொலை இருவருக்கு தீவிர சிகிச்சை
ADDED : நவ 01, 2025 04:23 AM
தேவனஹள்ளி: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், தற்கொலைக்கு முயற்சித்தனர். தந்தையும் மகனும் உயிரிழந்தனர். தாயும், மற்றொரு மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின் ஹெக்கனஹள்ளியில் வசித்தவர் குமாரப்பா, 60. இவரது மனைவி ரமா, 55. தம்பதிக்கு அருண்குமார், 30, அக்ஷய் குமார், 25, என்ற மகன்கள் இருந்தனர்.
குமாரப்பா, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழிலுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன்காரர்கள் பணத்தை கேட்டு, நெருக்கடி கொடுத்தனர். இவர்களின் தொந்தரவு அதிகரித்தது. மனம் வருந்திய குமாரப்பா, தன் மனைவி, மகன்களுடன் கலந்து பேசினார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
நேற்று முன் தினம் இரவு, அருண்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் விஷம் குடித்தனர். அருண்குமாரும், குமாரப்பாவும் இறந்தனர். ரமாவும், அக்ஷய் குமாரும் உயிருக்கு போராடினர். இவர்களின் அலறலை கேட்ட அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த சிக்கஜாலா போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமாவையும் அக்ஷய் குமாரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குமாரப்பா, அருண்குமார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன் குமாரப்பா எழுதிய கடித்ததை போலீசார் கைப்பற்றினர். அதில், 'சிலர் எங்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கின்றனர். இதனால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறோம்' என, அவர் விவரித்திருந்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.

