பெண் இன்ஜினியர் தற்கொலை? போலீசாரிடம் குடும்பத்தினர் தகவல்
பெண் இன்ஜினியர் தற்கொலை? போலீசாரிடம் குடும்பத்தினர் தகவல்
ADDED : ஏப் 30, 2026 12:15 AM

ஆடுகோடி: பெண் இன்ஜினியர் பூஜா தத்தா உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், 'மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம்' என்று, குடும்பத்தினர் கூறி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தை சேர்ந்தவர் பூஜா தத்தா, 33, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார். ஆடுகோடியில் வாடகை வீட்டில் வசித்தார்.
கடந்த 7ம் தேதி மாலை வீட்டிற்குள், நிர்வாணமாக உடல் அழுகிய நிலையில், பூஜா தத்தா உடல் கண்டெடுக்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தில் ரத்தக் கறையும் இருந்தது. அவரை யாராவது கொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்தாரா என, போலீசார் விசாரணையை துவக்கினர்.
தன்பாத்தில் வசிக்கும் அவரது பெற்றோர், குடும்பத்தினர் பெங்களூருக்கு வந்தனர். பூஜாவுக்கு திருமணம் ஆகவில்லை என்று, அவர் வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர் ஜனகம்மா கூறி இருந்தார்.
ஆனால், பூஜாவுக்கு திருமணம் ஆகி விட்டது என்று அவரது குடும்பத்தினர் போலீஸ் முன்பு கூறி உள்ளனர். கடந்த 2020ல் கொரோனா நேரத்தில் பூஜாவுக்கு திருமணம் நடந்தது. 2023ல் அவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்தார். கணவர் இறந்ததால் பூஜா மன அழுத்தத்திற்கு உள்ளானார். இதற்காக சிகிச்சையும் பெறவில்லை.
கணவர் இறந்த சில மாதங்களில், வேலைக்காக பெங்களூரு வந்தார். எங்களிடம் எப்போதாவது தான் பேசுவார். சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டார். வேலையை விட்டதற்கான காரணத்தை கேட்டதால், எங்களிடம் பேசுவது இல்லை. மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று, போலீஸ் முன்பு அவரது பெற்றோரும், குடும்பத்தினரும் கூறி உள்ளனர்.
ஆனாலும், பூஜா வீட்டிற்கு அடிக்கடி வாலிபர் ஒருவர் வந்து சென்றதால், அந்த வாலிபர் யார் என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பூஜாவின் வீடு முழுதும் குப்பையாக உள்ளது. சுவரில் ஒட்டி உள்ள பெரும்பாலான துண்டு சீட்டுகளில் ஈகோ, நம்பிக்கை, அமைதி என்று எழுதி உள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
