/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மலர் கண்காட்சிக்கு மக்களிடம் வரவேற்பு: சுதந்திர தினத்தன்று ரூ.88.47 லட்சம் வசூல்
/
மலர் கண்காட்சிக்கு மக்களிடம் வரவேற்பு: சுதந்திர தினத்தன்று ரூ.88.47 லட்சம் வசூல்
மலர் கண்காட்சிக்கு மக்களிடம் வரவேற்பு: சுதந்திர தினத்தன்று ரூ.88.47 லட்சம் வசூல்
மலர் கண்காட்சிக்கு மக்களிடம் வரவேற்பு: சுதந்திர தினத்தன்று ரூ.88.47 லட்சம் வசூல்
ADDED : ஆக 16, 2025 11:14 PM

பெங்களூரு: லால்பாக் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு, பொது மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சுதந்திர தினத்தன்று ஒரே நாளில், 88.47 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஜெகதீஷ் கூறியதாவது:
சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூரின் லால்பாக் பூங்காவில், மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இம்முறை மலர் கண்காட்சி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. லால்பாக் பூங்காவின் கண்ணாடி மாளிகையில், வீர ராணி கித்துார் சென்னம்மா, கிராந்தி வீரா சங்கொல்லி ராயண்ணா ஆகியோரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் சாதனைகள் பூக்களால் விவரிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க மக்கள் பெருமளவில் வருகின்றனர். விடுமுறை என்பதால், நேற்று முன் தினம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர்.
ஆகஸ்ட் 7ல், மலர் கண்காட்சி ஆரம்பமானபோது, மழை பெய்தது. எனவே சில நாட்களாக மக்கள் வரவில்லை. ஆனால் நேற்று முன் தினம் 1.79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். ஒரே நாளில் 88.47 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. இவர்களில் சிறார்களின் எண்ணிக்கை, அதிகமாக இருந்தது. ஆகஸ்ட் 18 வரை, மலர் கண்காட்சி இருக்கும் என்பதால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இன்று ஞாயிறு என்பதால், பள்ளி சிறார்கள் உட்பட, மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். மலர் கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு, எந்த பிரச்னையும் ஏற்படாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை ஊழியர்கள், போலீசாருடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.