ADDED : ஜூலை 12, 2026 11:52 PM

பெங்களூரு: மாநிலத்தில் பல இடங்களில், மழை பற்றாக்குறையால் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக உற்பத்தி குறைந்து, அரிசி, பருப்பு உட்பட, பல்வேறு தானியங்களின் விலை உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை, ஏறுமுகமாக உள்ளது. மார்க்கெட்டில் கிலோவுக்கு 45 ரூபாய் - கிலோவுக்கு 48 ரூபாய் வரை இருந்த அரிசி விலை, தற்போது, 55 ரூபாய் - 58 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதுபோல, 65 முதல், 70 ரூபாய் வரை இருந்த, உயர் ரக அரிசியின் விலை, 80 - 83 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
அரிசி மட்டுமின்றி, மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு, 43 - 45 ரூபாய் வரை இருந்த சர்க்கரை விலை, இப்போது, 46 - 47 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 135 ரூபாய் - 145 ரூபாய் வரை இருந்த வேர்க்கடலை விலை, 150 - 160 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கிலோவுக்கு 110 - 120 ரூபாய் வரை இருந்த உளுந்தம் பருப்பு விலை, 146 ரூபாயாக அதிகரித்துள்ளது. சோளம் விலை கிலோவுக்கு 30 - 35 ரூபாய் வரை இருந்தது. தற்போது 60 - 65 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மார்க்கெட்டில் சோனா மசூரி, ஸ்ரீராம சோனா போன்ற அரிசியின் விலை, தொடர்ந்து அதிகரிக்கிறது. மழை பற்றாக்குறை இது போல நீடித்தால், உணவு தானியங்கள் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
