/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒப்பந்த விதிகளை பாலகிருஷ்ணா குடும்பத்தினர் மீறல் நிலத்தை திரும்ப பெற வனத்துறை அதிகாரி கடிதம்
/
ஒப்பந்த விதிகளை பாலகிருஷ்ணா குடும்பத்தினர் மீறல் நிலத்தை திரும்ப பெற வனத்துறை அதிகாரி கடிதம்
ஒப்பந்த விதிகளை பாலகிருஷ்ணா குடும்பத்தினர் மீறல் நிலத்தை திரும்ப பெற வனத்துறை அதிகாரி கடிதம்
ஒப்பந்த விதிகளை பாலகிருஷ்ணா குடும்பத்தினர் மீறல் நிலத்தை திரும்ப பெற வனத்துறை அதிகாரி கடிதம்
ADDED : ஆக 30, 2025 03:30 AM

பெங்களூரு: நடிகர் விஷ்ணுவர்தனின் சமாதியை இடித்து, அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான, நடிகர் பாலகிருஷ்ணாவின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு 'ஷாக்' கொடுத்துள்ளது. அபிமான் ஸ்டுடியோவுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறும்படி, அரசுக்கு வனத்துறை பரிந்துரை செய்துள்ளது.
நடிகர் விஷ்ணுவர்தன், 2009 டிசம்பர் 30ம் தேதி காலமானார். அவருக்கு பெங்களூரு தெற்கு தாலுகா, கெங்கேரியின் மைலசந்திராவில் உள்ள அபிமான் ஸ்டுடியோவில் இறுதிச் சடங்குகள் நடந்தன. அங்கு அவருக்கு சமாதி கட்டப்பட்டது. இந்த ஸ்டுடியோ மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சொந்தமானது.
'சமாதிக்கு இடம் தர முடியாது' என, அப்போதே அவரது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை சமாதானம் செய்து, சமாதி கட்டப்பட்டது.
ஆனால், சில வாரங்களுக்கு முன்பு, விஷ்ணு வர்தனின் நினைவிடத்தை, பாலகிருஷ்ணா குடும்பத்தினர் இரவோடு இரவாக திடீரென இடித்து அகற்றினர்.
இது விஷ்ணுவர்தனின் ரசிகர்களை கோபப்படுத்தியது. பல நடிகர், நடிகையரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். விஷ்ணுவர்தனுக்கு அதே இடத்தில் நினைவு மண்டபம் கட்டும்படி வலியுறுத்தினர்.
இதற்கிடையே, 'அபிமான் ஸ்டுடியோ உள்ள இடம், வனப்பகுதி' என, வனத்துறை அறிவித்து, பாலகிருஷ்ணா குடும்பத்தினருக்கு 'ஷாக்' கொடுத்துள்ளது. மைலசந்திரா கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என, 1935லேயே அரசு அறிவித்திருந்தது.
வனப்பகுதிக்கு உட்பட்ட இடத்தின் சர்வே எண்: 26ல், 20 ஏக்கர் பரப்பளவு நிலத்தை அபிமான் ஸ்டுடியோ கட்ட, பாலகிருஷ்ணாவுக்கு, 20 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், அரசு அளித்திருந்தது. அதன்பின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
ஒப்பந்தம் அளிக்கும்போது, விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை பாலகிருஷ்ணா குடும்பத்தினர் மீறியுள்ளனர். நடிகர் பாலகிருஷ்ணாவின் பேரன் கார்த்திக், இந்த நிலத்தை ஏக்கருக்கு 14 கோடி ரூபாய் வீதம் விற்க முயற்சிப்பதாக தகவல் பரவியது. இது வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்துள்ளது.
எனவே இந்த நிலத்தை, பால கிருஷ்ணா குடும்பத்தினரிடம் இருந்து திரும்பப் பெறும்படி வனத்துறை அதிகாரி ரவீந்திர குமார், மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஒப்பந்த விதிமுறைகளை, பாலகிருஷ்ணா குடும்பத்தினர் மீறியுள்ளனர். 2004ல் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி, 10 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளனர்.
நிலம் விற்று கிடைத்த பணத்தை, அபிமான் ஸ்டுடியோ மேம்படுத்த பயன்படுத்தியதாக, அரசிடம் கூறினர். ஆனால் ஸ்டுடியோ அப்படியேதான் உள்ளது. எந்த வகையிலும் மேம்படுத்தவில்லை.
நிலத்தை அளிக்கும்போது விதிக்கப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறினால், எந்த நிவாரணமும் வழங்காமல், நிலம் திரும்பப்பெறப்படும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் விதிகளை மீறியுள்ளனர்.
தற்போதுள்ள நிலத்தையும் விற்க முயற்சி நடக்கிறது. எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்து, நிலத்தை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.