/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிராம மாணவர்களுக்கு வனத்துறை வாகன வசதி
/
கிராம மாணவர்களுக்கு வனத்துறை வாகன வசதி
ADDED : டிச 11, 2025 05:57 AM

சாம்ராஜ்நகர்: வன விலங்குகளின் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமல் தவித்த பச்சதொட்டி கிராமத்தின் மாணவ - மாணவியருக்கு வனத்துறை வாகன வசதி செய்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், பச்சதொட்டி கிராமத்தில் வன விலங்குகளின் தொல்லை அதிகம். இங்கு வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அடர்ந்த வனப்பகுதியில் 14 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இவர்கள் செல்லும் பாதையில் காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள் நடமாடுகின்றன. விலங்குகளின் பீதியால் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல பயந்து, பலரும் வீட்டிலேயே உள்ளனர்.
கிராமத்தின் மாணவ - மாணவியர் சேர்ந்து முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினர். 'நாங்கள் தினமும் உயிரை கையில் பிடித்தபடி, கல்வி கற்க செல்கிறோம். வன விலங்குகளின் பீதியால், சிலர் பள்ளிக்கே செல்வதில்லை.
எங்கள் கிராமத்தில் சரியான போக்குவரத்து வசதியும் இல்லை. எங்களை வன விலங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்.
பள்ளிக்கு செல்ல, பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து தாருங்கள்' என, வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மாணவர்களின் கடிதம் சமூக வலைதளங்களில் பரவியது. இதை கவனித்த சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக், வனத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பச்சதொட்டி கிராமத்தின் மாணவ, மாணவியருக்கு வாகன வசதி செய்யும்படி உத்தரவிட்டார்.
இதன்படி வனத்துறை ஊழியர்கள், தங்களின் வாகனத்தில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களை தினமும் அழைத்து சென்று, மீண்டும் வீட்டில் பாதுகாப்பாக கொண்டு வந்து விடுகின்றனர். அவர்களும் நிம்மதியாக பாடம் படிக்கின்றனர்.

