/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.டி., ஊழியரிடம் ரூ.48 லட்சம் மோசடி; குஜராத் மாநிலத்தின் இருவர் கைது
/
ஐ.டி., ஊழியரிடம் ரூ.48 லட்சம் மோசடி; குஜராத் மாநிலத்தின் இருவர் கைது
ஐ.டி., ஊழியரிடம் ரூ.48 லட்சம் மோசடி; குஜராத் மாநிலத்தின் இருவர் கைது
ஐ.டி., ஊழியரிடம் ரூ.48 லட்சம் மோசடி; குஜராத் மாநிலத்தின் இருவர் கைது
ADDED : டிச 11, 2025 05:57 AM

ஞானபாரதி: பாலியல் தொடர்பான பிரச்னையை தீர்ப்பதாக கூறி, ஐ.டி., ஊழியரிடம் 48 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், குஜராத் மாநிலத்தின் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு ஞானபாரதியில் வசிப்பவர் தேஜஸ், 30. ஐ.டி., ஊழியர். இவருக்கு 2023 ல் திருமணம் நடந்தது. பாலியல் தொடர்பான பிரச்னைக்காக கெங்கேரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த மே மாதம், பாலியல் பிரச்னைக்கு விரைவான தீர்வு என்று எழுதப்பட்டு இருந்த விளம்பர பலகையை பார்த்த தேஜஸ், அதில் குறிப்பிட்டு இருந்த மொபைல் நம்பருக்கு அழைத்து பேசினார்.
எதிர்முனையில் பேசியவர் தனது பெயரை விஜய் குருஜி என்று கூறினார். இருவரும் நேரில் சந்தித்தனர். பாலியல் பிரச்னையை தீர்க்க 1.60 லட்சம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வரும்படி தேஜஸிடம், விஜய் குருஜி கூறினார். அதன்படி அவரும் 'தேவராஜ் பூட்டி' என்ற மருந்தை வாங்கி குருஜி கூறியபடி குடித்தார். பின், பல தவணைகளில் தேஜசிடம் இருந்து விஜய் குருஜி பணம் வாங்கினார். மே முதல் ஆகஸ்ட் வரை தேஜசிடம் இருந்து 48 லட்சம் ரூபாய் வாங்கினார்.
ஆனால், தேஜஸுக்கு பாலியல் தொடர்பான பிரச்னை சரியாகவில்லை. மாறாக அவருக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது. பணத்தை திரும்ப தரும்படி கேட்ட போது விஜய் குருஜி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கடந்த மாதம் 30 ம் தேதி ஞானபாரதி போலீசில் தேஜஸ் புகார் செய்தார். விஜய் குருஜி, அவரது கூட்டாளி மனோஜ் சிங் ஆகியோரை போலீசார் தேடினர்.
இந்நிலையில் தெலுங்கானாவின் பைசரபாத்தில் நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 19.50 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு டெம்போ டிராவலர் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளாக மஹாராஷ்டிராவில் வசித்ததும், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகாவில் மோசடி செய்ததும் தெரியவந்து உள்ளது.

