/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துப்பாக்கி காட்டி மிரட்டிய 'மாஜி' போலீஸ் அதிகாரி
/
துப்பாக்கி காட்டி மிரட்டிய 'மாஜி' போலீஸ் அதிகாரி
ADDED : ஜூலை 02, 2025 09:22 AM

சதாசிவ நகர்; பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள 'நிதேஷ் அபார்ட்மென்ட்' கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலையில், லாரியில் இருந்து கிரானைட் கற்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
அப்போது கட்டடத்தின் எதிர் வீட்டில் இருந்து, கையில் டபுள் பேரல் துப்பாக்கியுடன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜெயபிரகாஷ் வெளியே வந்தார். லாரி ஓட்டுநரை நோக்கி துப்பாக்கியை காண்பித்து, 'எதற்காக இங்கு வந்தாய்; ஏன் இவ்வளவு சத்தம் போடுகிறாய்?' என்று மிரட்டினார்.
அதிர்ச்சி அடைந்த ஓட்டுநரும், தொழிலாளர்களும், 'அய்யா, நாங்கள் இங்கு கிரானைட்களை கீழே இறக்கிக் கொண்டிருக்கிறோம்' என்றனர். இதை கேட்காத ஜெயபிரகாஷ், தொழிலாளர்களையும், தடுக்க வந்த அவரது குடும்பத்தினரையும் திட்ட துவங்கினார்.
அவ்வழியாக வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஆங்காங்கே தங்கள் வாகனங்களுடன் நின்றுவிட்டனர். சிலர், வந்த வழியாக திரும்பிச் சென்றனர்.
பின்னர், ஜெயபிரகாஷை சமாதானப்படுத்திய குடும்பத்தினர், வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்து வந்த சதாசிவ நகர் போலீசார் விசாரிக்கின்றனர். அடாவடியாக நடந்து கொண்ட ஜெயபிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சதாசிவ நகரில் துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் வசித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், பட்டப்பகலில் துப்பாக்கியுடன் அவர் மிரட்டும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.