ஒரே குடும்பத்தை சேர்ந்த வங்கதேசத்தினர் நால்வர் கைது
ஒரே குடும்பத்தை சேர்ந்த வங்கதேசத்தினர் நால்வர் கைது
UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 08:44 PM
குடகு: இந்திய தொழிலாளர்கள் போல, சட்ட விரோதமாக காபி தோட்டத்தில் வசித்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த வங்கதேசத்தவர் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
குடகு மாவட்டம், பொன்னம்பேட் தாலுகாவின், பாளலே கிராமத்தின் காபி தோட்டத்தில், சிலர் சட்டவிரோதமாக வசிப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம், பொன்னம்பேட் போலீசார் அங்கு சோதனை நடத்தி, வங்க தேசத்தை சேர்ந்த நால்வரை கைது செய்தனர்.
கைதான நால்வரும், வங்கதேசத்தின் நியாஸ் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர். இவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இடைத்தரகர் உதவியுடன், சட்ட விரோதமாக எல்லையை கடந்து, இந்தியாவுக்குள் நுழைந்தனர்.
ஆரம்பத்தில் சிலகாலம் பெங்களூரில் வசித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன், குடகுக்கு வந்து, காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தது, விசாரணையில் தெரிந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நகர் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு அதிகரித்ததால், வங்க தேசத்தவர்கள், குடகு, மடிகேரி, சிக்கமகளூரு போன்ற மலைப்பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களில் சட்ட விரோதமாக வசிக்கின்றனர்.
தோட்டங்களின் உரிமையாளர்கள், பணிக்கு கூலியாட்களை நியமிப்பதற்குமுன், அவர்களின் பின்னணியை, தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆவணங்களை கட்டாயமாக பரிசீலிக்க வேண்டும்.
இதற்கு முன் பெங்களூரின், பெல்லந்துார், மாரத்தஹள்ளி, வர்துார் பகுதிகளில் சட்ட விரோதமாக வசித்த, 160க்கும் மேற்பட்ட வங்கதேச நபர்களை கண்டுபிடித்து, ரயில் மற்றும் விமானம் வாயிலாக நாடு கடத்தப்பட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
