UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 08:44 PM
பெங்களூரு: தசரா, தீபாவளி பண்டிகை வருவதால் மக்களின் ஆரோக்கியத்தை கருதி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாநிலம் முழுதும் இனிப்பு கடைகளில் அதிரடி சோதனை நடத்துகின்றனர்.
பொதுவாக, பண்டிகை நாட்களில் இனிப்பு கடைகளில் விற்பனை அதிகரிக்கும். தசரா மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. மக்களுக்கு தரமான இனிப்பு பண்டங்கள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணைய அதிகாரிகள், இனிப்புகள் தயாரிக்கும் மையங்கள், கடைகளில் அதிரடி சோதனை நடத்துகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் காதர் உத்தரவுபடி, அதிகாரிகள் பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் சோதனை நடத்துகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இனிப்பு பண்டங்கள் தரமானதாக இருக்க வேண்டும். மக்களின் நலனுக்காக இனிப்பு தயாரிப்பு மை யங்களில் திடீர் சோதனை நடத்துகிறோம். தீபாவளி வரை எங்களின் நடவடிக்கை தொடரும். அங்கு தயாரிக்கப்படும் பண்டங்கள் தரமானவையா என்பதை ஆய்வு செய்கிறோம்.
எந்த இடத்திலாவது துாய்மை, சுகாதாரம் இல்லாதது, தரமான இனிப்புகளை தயாரிக்காதது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம். கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும். பொதுமக்களின் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
