வாலிபர் அடித்து கொலை பெண் உட்பட நான்கு பேர் கைது
வாலிபர் அடித்து கொலை பெண் உட்பட நான்கு பேர் கைது
ADDED : மே 29, 2026 12:05 AM
பேட்ராயனபுரா: முன்னாள் காதலியை சந்திக்க சென்ற போது, அவரது கணவர், உறவினர்களால் தாக்கியதில், இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராம்நகரின் பி.டி.காலனியை சேர்ந்த முகமது காசிம், 27. இவரும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணும், நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை ஏற்காத பெண்ணின் பெற்றோர், பெங்களூரு பேட்ராயனபுராவின் சாமண்ணா கார்டனை சேர்ந்த அக்பருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகும், முகமது காசிம், தன் காதலியை அவ்வப்போது சந்தித்து வந்தார்.
இந்நிலையில், தன்னை சந்திக்க வரும்படி, கடந்த, 25ம் தேதி முன்னாள் காதலி அழைத்தார். சாமண்ணா கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற காசிம், பேசி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அக்பரும், அவரது உறவினர்களும், முகமது காசிமை கண்மூடித்தனமாக தாக்கினர். படுகாயம் அடைந்த காசிம், சிகிச்சை பெறாமல் வீட்டுக்கு சென்றார்.
வலி அதிகரித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
வழக்கு பதிவு செய்த பேட்ராயனபுரா போலீசார், முகமது அக்பர், அவரது உறவினர்கள் அர்பியா கவுஸ், உறவினர்கள் ஓவைஸ் பாஷா, முகமது சந்த் பாஷா ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
