ADDED : மே 28, 2026 03:10 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில், அற்புதமான கோட்டைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பு வாய்ந்தவை. சித்ரதுர்கா, மைசூரு, பெங்களூரு, உத்தர கன்னடா, யாத்கிர், தட்சிண கன்னடா, குடகு, கதக் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் கோட்டைகள் உள்ளன. அன்றைய மன்னர்களின் ஆட்சியின் திறனுக்கும், வீரத்துக்கும் எடுத்துக்காட்டாக அவை விளங்குகின்றன.
சிக்கமகளூரில், இயற்கை காட்சிகள் கொண்ட வனம், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், மலைப்பிரதேசங்கள் மட்டுமின்றி, ரகசியமாக மறைந்திருக்கும் அற்புதமான கோட்டையும் உள்ளது. மலையேற்றத்துக்கு செல்வோர், கோட்டையை கண்டு ரசிக்கின்றனர்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின், துர்கதஹள்ளியில், இயற்கையின் மடியில், பல்லாளராயன துர்கா மலை உள்ளது. இதன் நடுவில் கோட்டை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, அடர்த்தியான வனத்துக்கு நடுவே, கோட்டை ஒளிந்துள்ளது.
இதை ஹொய்சாள மன்னர் வீர பல்லாளன் கட்டினார். போர் நடக்கும் போது, ஆயுதங்களை சேகரித்து வைக்கும் நோக்கில், இந்த கோட்டையை கட்டியதாக கூறப்படுகிறது. இந்த இடம், மலையேற்ற பிரியர்களுக்கு சொர்க்கம். பல்லாளராயன துர்கா மலை, கடல் மட்டத்தில் இருந்து, 4,950 அடி உயரத்தில் உள்ளது.
இன்றைய காலத்தில், நிலத்தில் கட்டடம் கட்டுவதே பெரிய கஷ்டம். ஆனால் எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், இவ்வளவு உயரமான மலை மீது, இத்தகை அற்புதமான கோட்டையை எப்படி கட்டினார் என்ற கேள்விக்கு, இன்றைக்கும் விடை கிடைக்கவில்லை. கோட்டையை பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது.
இந்த இடம் எந்த அளவுக்கு அழகானதோ, அதே அளவுக்கு ஆபத்தானது. இப்பகுதியில் எப்போதும் பனிமூட்டமான சூழ்நிலை நிலவுகிறது. பாதையின் எதிரே என்ன இருக்கிறது என்பதே தெரியாது. பாறைகள் மீது பாதை தவறி கால் வைத்தால், 500 அடி பள்ளத்தாக்கில் விழும் அபாயம் உள்ளது.
கொட்டிகேஹாரா மற்றும் கெளகூருவை கடந்து சென்றால், வழியில் வரும் துர்கதஹள்ளியில் இருந்து, மலையேற்றம் துவங்கும். மலைப்பாதை மேடும், பள்ளங்களும் நிறைந்த கரடு முரடானது. இதில் ஏறி சென்று மலை உச்சியை அடைவது, பெரிய சாதனை.
மலைப்பாதையில் நடந்து செல்லும் போது, அரிய வகை பறவைகள், தோகை விரித்தாடும் மயில்கள் கூட்டம் என, பல அழகான காட்சிகளை காணலாம். மலையேற்றம் செய்ய, வனத்துறையின் செக்போஸ்டில் அனுமதி பெறுவது கட்டாயம். சிக்கமகளூருக்கு வரும் சுற்றுலா பயணியர், அடர்ந்த வனப்பகுதியில் மறைந்துள்ள, ரகசிய கோட்டையை காண மறக்காதீர்கள். ஆனால் எச்சரிக்கை தேவை!
எப்படி
செல்வது?
சிக்கமகளூரில் இருந்து, 75 கி.மீ.,யில், மூடிகெரேவில் இருந்து 40 கி.மீ.,யில் பல்லாளராயன துர்கா மலை உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து, மூடிகெரேவுக்கு அரசு பஸ்கள், ரயில்கள், தனியார் பஸ் வசதி உள்ளது. மூடிகெரேவில் இறங்கி, இங்கிருந்து வாடகை வாகனத்தில் மலைக்கு செல்லலாம். மூடிகெரேவில் தரமான ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள் உள்ளன. அனுமதி நேரம்: காலை 6:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை. தொடர்பு எண்: 81977 34730 அருகில் உள்ள சுற்றுலா தலம்: பன்டாஜே நீர் வீழ்ச்சி, ராணி ஜரி வியூ பாயின்ட், குதுரேமுக், சார்மாடி காட்.
