மாநகராட்சி தேர்தலுக்கு அவகாசம் சுப்ரீம் கோட்டில் ஜி.பி.ஏ., மனு
மாநகராட்சி தேர்தலுக்கு அவகாசம் சுப்ரீம் கோட்டில் ஜி.பி.ஏ., மனு
UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 11:34 PM
பெங்களூரு: ஜி.பி.ஏ.,யின் கீழ் இயங்கும் ஐந்து மாநகராட்சிகளுக்கான தேர்தலை, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் நடத்த அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்து உள்ளது.
பெங்களூரில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி, கடந்த 2020ன் செப்டம்பர் 10ம் தேதி முடிவுக்கு வந்தது. அதன்பின் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. அதிகாரிகளின் நிர்வகிப்பில் மாநகராட்சி இயங்கியது.
இதற்கிடையே ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் கீழ், ஐந்து மாநகராட்சிகள் பிரிக்கப்பட்டன. ஆறு ஆண்டுகளாக தேர்தல் நடத்தாதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
இவ்வழக்கில், டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வேறு காரணங்கள் எதையும் கூறி தேர்தலை ஒத்திவைக்க கோரக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. ஆனால் ஜி.பி.ஏ., அமைதியாக இருந்து வந்தது.
தற்போது, ஜி.பி.ஏ., தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் நடத்த அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்து உள்ளது.
‘எஸ்.ஐ.ஆர்., பணிகள், மறுஆய்வு செய்யப்படுவதால் தேர்தலை நடத்த அவகாசம் தேவை’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனுவில், ‘எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு முன்னதாக ஐந்து மாநகராட்சி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டே தேர்தல் நடத்த அனுமதி தரவேண்டும். ஏனெனில், எஸ்.ஐ.ஆர்.,க்கு பின் வெளியான வாக்காளர் பட்டியலில் வார்டு வாரியான வாக்காளர் விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை’ என, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
