UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 11:24 PM
பெங்களூரு: ‘‘கர்நாடகாவில் ‘கோல்டன் சாரியட்’ சொகுசு ரயில் போக்குவரத்து, வரும் 24ம் தேதி துவங்குகிறது,’’ என, சுற்றுலா துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
புதுப்பொலிவுடன், ‘கோல்டன் சாரியட்’ சொகுசு ரயில் போக்குவரத்து, அக்டோபர் 24ல் துவங்கவுள்ளது. இந்த ரயில் மூலமாக வன விலங்குகள் சரணாலயம், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணியருக்கு அறிமுகம் செய்யப்படும். கோல்டன் சாரியட்டை பலப்படுத்த, முதல்வர் சிவகுமார் ஆர்வம் காட்டுகிறார்.
பண்டிப்பூர் வன விலங்குகள் சரணாலயம், மைசூரின் பாரம்பரிய இடங்கள், பேலுார், ஹளேபீடின் சிற்பங்கள், சிக்கமகளூரின் காபி தோட்டங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமான ஹம்பி, கோவா கடலோர பகுதிகள் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களை ரசிக்கலாம்.
கோல்டன் சாரியட் என்பது, வெறும் சொகுசு ரயில் பயணமாக இருக்காது. மாறாக கர்நாடகாவின் சிறப்புகளை உள்நாடு, வெளி நாடுகளின் சுற்றுலா பயணியருக்கு அறிமுகம் செய்யும் சாதனமாக இருக்கும்.
இந்த ரயிலை நடப்பாண்டு மே முதல், ஆகஸ்ட் வரை, மைசூரின் ஒர்க் ஷாப்பில் வைத்து, தொழில்நுட்ப பழுதுகள் சரி செய்யப்பட்டன. ரயிலின் வெளிப்பகுதிக்கு புது வடிவம் அளிக்கப்பட்டுள்ளது. பெட்டிகள், சமையல் அறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
சமையல் பிரிவில் அதிக திறன் கொண்ட மின் அடுப்பு, நீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஓவன் உட்பட அனைத்து வசதிகளும் இருக்கும். முதற் கட்டமாக யாத்திரைக்கு, சுற்றுலா பயணியரிடம் கிடைக்கும் வரவேற்பை கவனித்து, இதன் சேவையை விஸ்தரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோல்டன் சாரியட் குறித்து, பிரசாரம் செய்யப்படும். முதல் யாத்திரைக்கு, 100 சதவீதம் இருக்கைகளும் முன் பதிவாகியுள்ளன. இது ஒரு நல்ல ஆரம்பமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
