UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 11:24 PM
பெங்களூரு: ஹெப்பால் சுரங்கப்பாதை திட்டத்துக்காக, 1,128 மரங்களை வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
பெங்களூரு மேக்ரி சதுக்கம் முதல் எஸ்டீம் மால் வரை 2.32 கி.மீ., துாரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க 1,128 மரங்களை வெட்ட உள்ளதாக ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் கடந்த மாதம் 22ம் தேதி அறிவித்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
மரங்கள் வெட்டப்பட்டால் ஹெப்பால் ஏரி, நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும் என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இவ்விஷயம் குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கிளையான, சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், மங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு, 1,128 மரங்களை வெட்டுவதற்கு வரும் டிசம்பர் 15ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் மரங்கள் வெட்டப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
